“நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளி 22:13).

இந்த தேவனே எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவுமாயிருக்கிறார். நாமும் அவருடைய திட்டத்தின்படி நோக்கத்தின்படி சிருஷ்டிக்கப்பட்டவர்கள். இவ்வளவு பெரிய ஒரு தேவனை நாம் எவ்விதமாகக் கனப்படுத்துகிறோம் என்பது முக்கியம். நம்முடைய வாழ்க்கையில் அவரே ஆரம்பமும் முடிவும் என்பதை உணராமல், நம்முடைய சொந்த யோசனைகளைக் கொண்டு வாழப் பிராயசப்படுகிறோம். நம்மில் நற்கிரியை ஆரம்பித்தவர் முடிவுபரியந்தம் நடத்துவார் என்று சொல்லப்படுகிற அந்த வார்த்தையை நாம் சார்ந்துக்கொண்டு வாழும்பொழுது, நம்முடைய வாழ்க்கையின் வழிகளிலும் அவரையே சார்ந்து வாழக் கற்றுக்கொள்வோம். அநேகர் தேவனை நம்புகிறோம் என்றுச் சொன்னாலும், அவர்கள் தங்கள் சொந்த ஞானத்தையே நம்புகிறார்கள். அதினால் அவர்கள் தோல்வியும் அடைகிறார்கள். ஆனால் தேவனையே முற்றிலும் சார்ந்து கொள்ளுவதைப் போல நமக்கு மெய்யாலுமே சுலபமானது வேறெது? நமக்குள் பெருமையும், மேட்டிமையும் இருக்கும்பொழுது நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே தேவனுடைய சித்தத்திற்கு எதிராகப் போராடப் பார்க்கிறோம். “முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்று ஆண்டவர் சவுலைப்பார்த்துச் சொன்னதைப் போல நாமும் அநேக வேளைகளில் முள்ளில் உதைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது அவரை நோக்கி, ஆண்டவரே நான் ஞானமற்றவன், பெலனற்றவன், நீரே என்னை முற்றிலும் வழிநடத்தும் என்று ஜெபிப்போம். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மிக அருமையானது, பாதுகாப்பானது.