கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 14                 நீதிமானுக்கு வரும் துன்பங்கள்            சங் 34  12 – 22

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்,

கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுப்பார் (சங் 34 : 19)

    வேதம் ஒன்றே உள்ளதை உள்ளபடியாக சொல்லுகிறது. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகம். உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று தெளிவாய் அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்றைக்கு அநேக பிரசங்கங்களில் கிறிஸ்தவனுக்கு கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாக்குப்பண்ணுகிறார்கள். அன்பானவர்களே! இது தவறான உபதேசம். ஒரு மெய்கிறிஸ்தவனுக்கு அநேகமான துன்பங்கள், சோதனைகள், உபத்திரவங்கள் உண்டு. ஆனால் அதுமாத்திரம் சொல்லப்படுமானால் அது பொய். பிசாசு இவ்விதம் பாதி உண்மையை பாத்திரம் சொல்லி பயமுறுத்துவான். ஆனால் அடுத்த பகுதியை மறைத்துவிடுவான். ‘கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்’. அவைகளில் சிலவற்றில் மாத்திரம் கர்த்தர் விடுவிப்பார் என்றா சொல்லப்பட்டிருக்கிறது?இல்லை உறுதியாக இல்லையென்று அழுத்திச்சொல்லலாம். ’ அவைகளெல்லாவற்றிலும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நாம் கர்த்தரை துதிக்க வேண்டும், ஸ்தோத்தரிக்க வேண்டும்.

   உன்னுடைய துன்பம், சோதனை எந்தவிதமானதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும் சரி மனந்தளராதே. தேவனை பற்றிக்கொள். தேவன் ஒன்று விடாமல் எல்லாவற்றிலும் உன்னை விடுவிப்பார். நீ பொறுமையோடு இந்த நேரத்தில் கர்த்தரின் விடுதலைக்காகக் காத்திரு. அசையாமல்  விசுவாசத்தில் உறுதியாயிரு. வாக்குபண்ணினவர் வல்லவர், உண்மையுள்ளவர் அவர் அப்படியே செய்வார்.

   கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க அறிந்திருக்கிறார்’ (2 பேதுரு 2 : 9). தேவன் உன்னை இந்த சோதனையினின்று எப்படி இரட்சிக்கவேண்டுமென்பதை அறிந்திருக்கிறார். அவருக்கு உன் சோதனைகள் தெரியாதவைகள் அல்ல. தேவன் என்னை மறந்தாரோ என்று எண்ணிகலங்காதே. தேவன் உனக்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கை உண்டாக்கி உன்னில் மகிமைப்படுவார். நீ விசுவாசத்தில் பெலப்படுவாய்.