“ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக” (நெகேமியா 1:11).

நெகேமியா தேவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தி ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம். நெகேமியா ராஜ அரண்மையில் வேலை செய்கிற ராஜாவுக்கு மிக முக்கியமான ஒரு மனிதன். ஆனால் அவனுடைய இருதயத்தில் மேட்டிமையில்லை. தாழ்மையே இருந்தது. தாழ்மையுள்ள ஜெபம் எப்பொழுதும் கர்த்தருக்குப் பிரியமானது. மேலும் கர்த்தருக்குப் பயப்பட வேண்டும் என்ற இருதயத்தை நெகேமியா வெளிப்படுத்துகிறான். அது மனிதனுக்கு பயப்படுகிற பயத்தைப் போலல்ல. இது கர்த்தருக்குரிய பரிசுத்த பயம். ஆண்டவருக்குப் பிரியமாக வாழவேண்டும் என்றும் அவருக்குப் பிரியமில்லாத காரியத்தைச் செய்யக்கூடாதே என்ற ஒரு பரிசுத்த பயம். இவ்விதமான பயத்தைக் கர்த்தர் நிச்சயம் அங்கீகரிக்கிறார். நெகேமியா ராஜ அரண்மையில் இருந்தாலும் தன் பக்திகுரிய வாழ்க்கையைக் காத்துக்கொள்வதில் எவ்வளவு ஜாக்கிரதையுள்ளவனாக இருந்தான் என்பதைப் பார்க்க முடிகிறது. இன்றைக்கு அநேகரை தங்களுக்குக் கிடைக்கின்ற பதவிகளும் பணமும் ஆண்டவரை விட்டு விலகிப் போகச் செய்து விடுகிறது. ஆனால் நெகேமியா போன்ற ஒரு மனிதனுடைய வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குப் பிரியமாய் வாழுவதே முதலாவது. தேவனைத் தாழ்மையாய் அண்டிக்கொள்கிற கிருபையை நமக்குக் கொடுப்பராக.