“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1).

பாவிகளாகிய நாம் இந்த உலகத்தில் தகுதியற்றவர்கள். ஆனாலும் தம்முடைய பிள்ளைகள் என்று நம்மை அழைப்பார் என்றால் இந்த அன்பு ஒரு அசாதாரணமான அன்பு. இந்த அன்பு என்பது நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய நிலையையே முற்றிலும் மாற்றி அமைத்திருக்கிறது. நரகத்திற்கும் இந்த உலகத்தில் தண்டனைக்கும் பாத்திரவான்களாய் இருக்கும் நம்மை தேவன் தம்முடைய பிள்ளை என்று அழைக்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையில் பாராட்டியிருக்கிற இந்த அன்பு எவ்வளவு பெரியது என்று பார்க்கவேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய அன்பை விலைமதிப்போம். ஆண்டவருடைய பிள்ளை என்று வெறுமையாய் அழைக்கப்படுவது அல்ல. பிள்ளைக்குரிய எல்லா சிலாக்கியங்களும் கொடுக்கப்படுகின்றன. ஒரு பிள்ளை தன் வீட்டில் தன் தகப்பனிடத்தில் எந்தளவுக்கு உரிமையைக் கொண்டு வாழக் கூடிய சிலாக்கியத்தை பெற்றிருக்கின்றதோ அதை விட தேவன் நமக்கு மேலான உரிமைகளைக் கொடுத்திருக்கிறார். பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவை கொடுக்க அறிந்திருக்கும் போது தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானதைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா? அநேக வேளைகளில் தேவனுடைய பிள்ளைகள் என்ற சிந்தையைக் கொண்டவர்களாக நாம் வாழுவதில்லை. அடிமைத்தனத்தின் மனநிலையைக் கொண்டு வாழுகிற வேளைகள் உண்டு ஆனாலும் நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மூலமாகப் பெற்றிருக்கிற எவ்வளவு பெரிய சிலாக்கியத்திற்குப் பங்காளிகளாகிய நாம் அவருடைய அன்பிற்கு பாத்திரவான்களாக நாம் இல்லை. ஆனால் அவருடைய அன்பின் நிமித்தமாக அவருடைய பிள்ளைகளாக அவர் ஏற்றுக்கொண்டார். அதற்குரிய சிலாக்கியங்களை நாம் உணர்ந்து வாழும்பொழுது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் உன்னதமான சிலாக்கியங்களைப் பெற்று வாழக்கூடியவர்களாய் நாம் காணப்படுவோம். கர்த்தர் நாம் அந்தளவுக்கு வாழ நமக்கு உதவி செய்வராக.