ஜூலை 1 

“ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்” (உபா 8:10).

      நம் தேவனாகிய கர்த்தர் நமக்கு செய்திருக்கும் நன்மைகளை நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது திருப்தியுள்ள நபர்களாக நாம் காணப்படுவோம். நம்முடைய வாழ்க்கையில் மெய்யான கடவுள் யார் என்பதை நாம் அறிந்து கொள்ளும்படியாக கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கிறார். நம் வாழ்க்கையில் அவருடைய எண்ணிமுடியாத கிருபைகளைக் கொடுத்திருக்கிறார். மேலும் அவருடைய கிருபைகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படியாக கிருபையின் சாதனங்களான வேத வாசிப்பு, ஜெபம், சபையில் ஐக்கியம், ஒருவருக்கொருவர் அன்பு கூருதல் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நம்மை வழிநடத்தும் படியாக தேவன் அவருடைய வேதத்தின் மகத்துவங்களை எழுதி நமக்குக் கொடுத்திருக்கிறார். இவ்விதமாக கர்த்தர் நமக்கு செய்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை எண்ணிப் பார்க்கும் பொழுது நாம் அவரை எப்படி ஸ்தோத்தரிக்காமல் இருக்க முடியும்? ஆகவேதான் சங்கீதக்காரன் “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” (சங் 103:2) என்று சொல்லுகிறார்.

      கர்த்தர் நமக்கு செய்திருக்கும் ஒவ்வொரு நன்மையும் கணக்கிடப்பட முடியாதது. இவ்வாறாக நாம் பெற்ற நன்மைகளுக்கு தேவனுக்கு நன்றி செலுத்தாமல் இருப்போமானால் கர்த்தர் துக்கப்படுகிறவராக காணப்படுகிறார். இல்லாத ஒன்றை நினைத்து, கர்த்தர் கொடுத்திருக்கும் அருமையான ஈவுகளை மறப்பது மனிதனின் பாவ இயல்பில் ஒன்றாகும். கர்த்தருடைய பிள்ளைகள் இல்லாததற்காக வருத்தப்படாமல், இருப்பதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவார்கள். ஆகவேதான் அவர்கள் போதுமென்ற மன நிலையுடன் வாழுகிற மக்களாக காணப்படுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் நாமும் அவ்விதமாகவே வாழும் படியாகவே கர்த்தர் விரும்புகிறார். நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தேவனை மகிமைப்படுத்துவோம். எல்லாவற்றுக்காகவும் நன்றிகளை செலுத்துவோம். எல்லாவற்றிற்காகவும் துதிகளை ஏறெடுப்போம். அது கர்த்தருக்குப் பிரியமான பலி. அது நம் இருதயத்திற்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும்.