அக்டோபர் 12        

“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பெலவீனமுள்ளது என்றார்” (மத்தேயு 26:41)

சோதனை பாவமல்ல, ஆனால் சோதனைக்குட்படுவது பாவம். இந்த உலகில் எவ்வளவு பெரிய பரிசுத்தவானாக இருந்தாலும், சோதனை இல்லாமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு விசுவாசிக்கும் சோதனை உண்டு. இந்த உலகில் எந்த பரிசுத்தவானாகிலும் நான் சோதனையைக் கடந்துவரவில்லை என்று சொல்லக்கூடுமா? சரியாக சொல்லக்கூடுமானால், அவர்களே அதிகமான சோதனையின் ஊடாக கடந்து சென்றவர்கள். ஆனால் அநேகர் கர்த்தருடைய கிருபையால் அதற்கு உட்படாதவர்கள்.

நமது மாம்சம் பெலவீனமுள்ளது. சோதனையை மேற்க்கொள்ள நமது மாம்சத்தின் பெலன் உதவாது. மேலும் பவுல், “என் மாம்சத்தில் நன்மை வாசமாயிருக்கிறதில்லை என்று நான் அறிந்திருக்கிறேன்” (ரோமர் 7:18) என்று சொல்லுகிறார். உன்னுடைய சொந்த ஞானத்தால், உன்னுடைய சொந்த பெலத்தால் ஒருபோதும் சோதனையை மேற்கொள்ளமுடியாது.

ஆகவே ஆண்டவராகிய இயேசு சோதனைக்குள் விழுந்து போகாமல் இருக்க என்ன ஆலோசனை கொடுக்கிறார்? “விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.” அதாவது ஜாக்கிரதையாக இருந்து, கவனமாயிருந்து ஜெபியுங்கள். உண்மையான ஜெபம் என்பது  சாதாரணமானதல்ல. எந்த ஒரு பரிசுத்தவானும் ஜெபம் எனக்கு சாதாரணமானது என்று சொல்லமுடிவதில்லை. சாத்தான் நம்மை ஜெபிக்க விடமாட்டான். ஜெபிப்போம் என்று எண்ணினால் அதற்கு  பல தடைகள் வருகின்றன. திடீரென்று அந்த வேளையில்தான் யாராகிலும் விருந்தாளி வருவார்கள். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற சோம்பல். உன்னுடைய வாழ்க்கையில் ஜெபத்திற்கு பல பல தடைகள் எழும்பும். ஆகவேதான் அதில் விழிப்பு தேவை, ஜாக்கிரதையும் தேவை. எந்தத் தடையானாலும் அதை மேற்கொண்டு ஜெபிக்க உறுதி தேவை. அப்படி ஜெபிக்கும் போது, நீ  சோதனையில் விழமாட்டாய். உன் ஜெபத்தைதக் கேட்டு, தேவன் உன்னைப் பாதுகாப்பார். சோதனையில் நீ வெற்றியோடு கடந்துபோவாய்.