மே 8               

“என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்” (1நாளா 28:9).

தாவீது தன் மகனாகிய சாலமோனுக்கு இந்த ஆவிக்குரிய ஆலோசனையை கொடுக்கிறதை நாம் வாசிக்கிறோம். தாவீது இந்த இடத்தில் தன்னுடைய மகனுக்கு தேவனுடைய சத்தியத்தை தெளிவான விதத்தில் கூறுகிறார். தன் மகன் என்று பாரபட்சம் இல்லாமல், சத்தியத்தை சத்தியமாக மகனுக்குப் போதிப்பதை நாம் பார்க்கும் பொழுது, எவ்வளவு உண்மையான விதத்தில் தாவீது செயல்பட்டார் என்பது நமக்கு ஒரு பெரிய பாடமாக இருக்கிறது. அநேக கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடத்தில் ஆவிக்குரிய விதத்தில் அன்போடு கூடிய, கண்டிப்புடன் செயல்படுவது இல்லை. தங்களுடைய பிள்ளைகள் தவறு செய்தால், அதை ஆண்டவருடைய வேதத்தின் அடிப்படையில் நேர்மையாகக் கண்டிப்பது இல்லை. இது மிகப்பெரிய தவறு. தாவீது சாலமோனுக்கு ஒரு ஆழமான ஆவிக்குரிய உண்மையை எடுத்துச் சொல்லுகிறார்.

கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்கள் எல்லாம் அறிந்திருகிறார். நாம் ஆராதிக்கும் தேவன் மனிதனைப் போல் அல்ல. தேவன் நம்முடைய செயல்களை மாத்திரம் பார்க்கிறவர் அல்ல. நம்முடைய இருதயங்களை பார்க்கிறவராக, அதை ஆராய்ந்து அறிகிறவராக இருக்கிறார். அது எவ்வளவு ஆழமானது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய இருதயத்தில் எழும்பும் நினைவுகளின் தோற்றத்தையும்  கூட தேவன் அறிந்திருக்கிறார். ஆகவே தாவீது தன்னுடைய மகனுக்கு மிக ஆழமான விதத்தில் எச்சரிப்பை கொடுக்கிறதைப் பார்க்கிறோம். பின்னுமாக ‘நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்’ என்று எச்சரிப்பைக் கொடுப்பதை நாம் பார்க்கிறோம். அதேவேளையில் ‘நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்’ என்கிற நம்பிக்கையையும் கொடுக்கிறார். நாம் நம்முடைய பிள்ளைகளிடத்தில் ஆண்டவருடைய சத்தியத்தை நேர்மையும், உண்மையுமாக சொல்லி, அதனடிப்படையில் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையை கட்டுவதையே தேவன் விரும்புகிறார்.