“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்கீதம் 34:8).

        தேவனைக் குறித்த எண்ணங்கள் நம்மை அதிகமாக ஆக்கிரமித்து நாம் வாழவேண்டியவர்களாக இருக்கிறோம். அநேக சமயங்களில் நாம்  நம்மை பற்றியும், நம்முடைய பாரங்களைப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கு பரிகாரமாக ஆண்டவரைக் குறித்து நாம் அதிகம் எண்ணாமல்  தவறிவிடுகிறோம். ஆனால் மெய்யாலுமே நம்முடைய வாழ்க்கையில் தேவனை எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். கர்த்தர் நல்லவர். அவர் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு நல்லவராக இருக்கிறார், இருந்திருக்கிறார் என்பதை அதிகமாக நாம் சிந்திப்பது மிக அவசியம். அவர் நமக்கு செய்த நன்மைகள், கிருபை, இரக்கங்கள் இவைகளை அதிகமாக நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது,  அவர் நமக்கு எவ்வளவு நல்லவராக எப்பொழுதும் இருந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.  “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங் 36:7)  என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் நல்லவர் என்பதை நம்முடைய வாழ்க்கையில் நாம் ருசித்துப் பார்த்து, அதன் அடிப்படையில் வாழும் பொழுது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் மேலான காரியங்களைச் செய்பவராக இருப்பார். அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கும் மனுஷன் பாக்கியவான். அதாவது ஆசீர்வதிக்கப்பட்டவன். நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரின் பேரில் மட்டுமே நம்பிக்கை இருக்கட்டும். வேறு எதையும் நம்முடைய வாழ்க்கையில் நம்பிக்கையாய்க் கொண்டிராமல் வாழ்வதற்குரிய காரியத்தை கர்த்தர் நமக்கு கற்றுத்தருவராக. அப்போது  மெய்யாலுமே சமாதானம் சந்தோஷம் உள்ளவர்களாய் நாம் காணப்படுவோம்.  கர்த்தர் நல்லவர் என்பதை நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு அனுபவிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து வாழ்பவர்களாக  காணப்படுவோம் அது தேவனுடைய பிள்ளைக்கு ஒரு நல்ல ஆத்தும ஆகாரமாக பெலனடைந்து வாழ உதவி செய்யும்.