நவம்பர் 19
“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிற வருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம” (எபிரெயர் 12:1).
நம்முடைய வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்? அநேகர் இந்த உலகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவன் இயேசுவை மாத்திரமே நோக்கி ஓடிக்கொண்டிருப்பான். அவன் கிறிஸ்துவை உடையவன். கிறிஸ்துவின் வழிகளில் நடக்கிறவன். நீ கிறிஸ்தவன் என்று சொல்லுகிறாய் சரி, அப்படியானால் மேலே குறிப்பிட்ட காரியங்கள் உன்னில் காணப்படுகின்றதா? தேவன் உனக்கென்று திட்டமிட்டு காரியங்களை நடப்பிக்கிறவராக இருக்கிறார். அதில் அநேக பாடுகள், உபத்திரவங்கள் நிறைந்து காணப்படலாம். அதன் மத்தியில் நீ எவ்விதம் ஓடிக் கொண்டிக்கிறாய்? உன்னுடைய ஓட்டத்தில் சோர்வும், நம்பிக்கையின்மையும் காணப்படுகின்றதா? அல்லது கிறிஸ்துவின் பெலத்தோடு நீ ஓடிக்கொண்டிருக்காயா?
“நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” (எபிரெயர் 10:36) என்று வேதம் சொல்லுகிறது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்? தேவன் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திற்கு வெற்றி நிச்சயம், ஆனால் அந்த வெற்றியை அடைய நாம் பொறுமையோடே ஓடவேண்டும். ஏனெனில் தேவன் அதை நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். அதை நிறைவேற்றக் கூடிய வழியை அவரே அறிந்தவர் என்பதை நினைவில் கொள். பொறுமையில்லாமல் நாம் ஜீவக் கீரிடத்தைப் பெற முடியாது. பொறுமையில்லாமல் நாம் தேவனுடைய மகத்துவமான காரியத்தைக் காண முடியாது. ஒரு கிரிஸ்தவனில் காணப்படுகின்ற அடிப்படை குணாதிசயம் பொறுமை. “சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்” (13:10) என்று வேதம் சொல்லுகிறது. அதாவது சோதனைகளின் மத்தியில் கிறிஸ்தவனின் பொறுமையும் விசுவாசமும் காணப்படும் என்று வேதம் சொல்லுகிறது. அருமையானவர்களே! நீங்கள் எவ்விதம் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?