கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 14                    இலவசமாய் வாங்கிச் சாப்பிடுங்கள்                ஏசாயா 55:1-13

“ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்;

பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து,

பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்” (ஏசாயா 55:1).

        தேவன் நமக்கு இலவசமாக எல்லா கிருபைகளையும் வைத்திருக்கிறார். அநேகர் இதை விலைமதிப்பதில்லை. அவர்கள் இதனுடைய விலைமதிப்பை அறியாததினால் அற்பமாக எண்ணுகிறார்கள். பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தில் “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” (ரோமர் 3:24) என்று எழுதுகிறார். இந்த உலகத்தில் தேவன் நம்மை நீதிமானாக்கும்படி இலவசமான கிருபையை வைத்திருக்கிறார்.

     இயேசு கிறிஸ்து தன்னையே பலியாகக் கொடுத்து, ஈனச் சிலுவையை சுமந்து இவ்வளவு பெரிதான இரட்சிப்பை நமக்கு வைத்திருக்கும்பொழுது, நாம் அதனுடைய மேன்மையை உணராதவர்களாக நம்முடைய பாவத்தில் அழிவது எவ்வளவு பரிதாபத்திற்குரிய காரியம். மேலுமாக பவுல் எபேசியருக்கு எழுதும்பொழுது, “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” (எபே 2:4-5) என்று எழுதுகிறார்.

     நம்முடைய வாழ்க்கையில் இந்த இலவசமான ஈவை உதாசீனப்படுத்தும் பொழுது, கர்த்தருடைய கிருபையை நாம் இழந்து போய்விடுவோம். ஏசா கர்த்தரின் கிருபையை அலட்சியப்படுத்தினான், அவன் தன் இரட்சிப்பை இழந்துபோனான். மேலுமாக ஏசாயா 55:2 –ல் “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? ” என்று கேட்கிறார். ஏன் உன் சொந்த முயற்சி, அறிவு, ஞானத்தைக்கொண்டு திருப்திசெய்யாத பொருளுக்காக, உன் பிரயாசத்தையும் செலவழிக்கிறாய்? இன்னுமாக அவர் “நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்” என்று சொல்லுகிறார். தேவனுடைய வழியில் மாத்திரமே, மெய்யான மகிழ்ச்சியும், சமாதானமும் உண்டு. மற்ற வழிகள் அனைத்துமே வீணானவைகள் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.