கிருபை சத்திய தின தியானம் 

மார்ச் 8                                 அவர் பெருக நாம் சிறுக          யோவான் 3 : 25 – 36

“அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:30)

     யோவன் ஸ்நானகனின் வாஞ்சையைப்பாருங்கள். இன்றைக்கு எங்குப்பார்த்தாலும் ‘நான் எப்படி பெருகமுடியும்? என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அதற்கு மனிதன் கடுமையாக உழைக்கிறான், பல பாடுகள் படுகிறான். தன்னுடைய காலம், நேரம், பொருள் அனைத்தையும் இதற்காகவே செலவிடுகிறான். இரவென்றும் பகலென்றும் பாராமல் கடுமையாக உழைக்கிறான். உலகத்தில் எந்த திசை, எந்த தேசம், எந்த பக்கம் திரும்பினாலும் இதன் எதிரொலியைப் பார்க்கிறோம். இவைகள் எல்லாவற்றின் அடிப்படையான நோக்கம் தன்னை மற்றவர்கள் முன்பாக உயர்த்தவேண்டும், தன்னுடைய அந்தஸ்து உயர்ந்திருக்கவேண்டும் என்பது தான்.

     உலகத்தின் ஆரம்ப நாட்களிலும் அவ்விதமாகத்தான் இருந்தது. ‘பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதப்படிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்கு பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்’ (ஆதி 11:4) அவர்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டி தங்களை உயர்த்த விரும்பினார்கள். தன்னை உயர்த்துவது மனிதனின் இருதயத்தில் ஊறிபோனது. அதை யாரும் மாற்ற முடியாது.

     ஆனால் யோவான் ஸ்நானகன் வித்தியாசமாக சொல்லுகிறார். யோவான் ஸ்நானகன் தேவ வல்லமையினால் மாற்றப்பட்ட மனிதர். இருதயம் மாற்றப்பட்டுவிட்டது. அவர் சிறுகவேண்டுமென்பது மட்டுமல்ல, என் ஆண்டவர் இயேசு என்னில் பெருகவேண்டும். அவர் பெருகுவதே என்னுடைய மகிழ்ச்சி, நானல்ல அவர் என்னில் மேன்மையாக வெளிப்படுவாரானால்  அதுதான் எனக்கு மேன்மை. எப்பொழுது இயேசு நம்மில் பெருகுவார்? நம்முடைய வாழ்க்கையை மற்றவர்கள் பார்க்கும்பொழுது இயேசு அவர்கள் பார்வையில் உயர்ந்திருப்பார். நம்முடைய வாழ்க்கையில் இந்த உலகமக்களில் காணக்கூடாத தேவ அன்பை, பொறுமையை, சாந்த குணத்தை, , நிதானமான பேச்சை, நேர்மையை, உண்மையை மற்றும் கிறிஸ்துவுக்குள்ளான நற்குணங்களைக் காணும் பொழுது அவர் நம்மில் பெருகுவார்.