கிருபை சத்திய தின தியானம்

மே 1                                     நிலையான நகரம்                             எபி 13 : 1 – 14

‘நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம் (எபிரேயர் 13 : 14)

            இந்த உலகம் நிலையான இடமில்லை என்பதை நாம் அவ்வப்பொழுது நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இந்த உலகம் எப்போதும் நமக்கு சோதனையாக இருப்பதால் இந்த உலகத்தில், அதன் காரியங்களிலேயே முழுகிப்போகாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள், என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். வேதம் திட்டமாய் போதிக்கிற அடுத்தக் காரியம் என்னவென்றால், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை. இன்றைய அநேக போதகர்கள் உலகத்துக்கடுத்த சுவிசேஷத்தையே பிரசங்கிக்கிறார்கள். அவர்கள் என்ன உபதேசிக்கிறார்கள்? நாம் தேவனைப் பின்பற்றினால் நம்மை கர்த்தர் அதிகமான உலக நன்மைகளினால் நிரப்புவார் என்றும், இந்த உலகத்தில் கஷ்டம், கவலை எதுவும் இருக்காது என்றும் படிப்பு, உயர்பதவி, செல்வம், புகழ், உலகமேன்மை கிடைக்கும் என்றும் போதிக்கிறார்கள். அன்பானவர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும். இந்த விதமான போதனை தேவனுக்குரியதல்ல, வேதத்தின்படியானதல்ல.

            நாம், இந்த உலகம் நிலையானதல்ல என்பதோடு நின்றுவிடாமல் வரப்போகிற நகரத்தை நாடுகிறவர்களாக இருக்கவேண்டும். அதாவது அதைக்குறித்து ஆவலாய் அறிய வாஞ்சிக்கவேண்டும். வேதம் அதைக்குறித்து சொல்லுகிறபடி அறிந்து, அதில் பிரியம் வைக்கிறவர்களாக இருக்கவேண்டும். அதின் மேன்மையை அதிகம் வாஞ்சிக்கிறவர்களாய் நாம் இருக்கவேண்டும்.

            பூமியின்மேல் தங்களை அந்நியரும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுய தேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.’ (எபி 11 : 13, 14). இந்த விசுவாசிகளைப் பாருங்கள். தங்களை இவ்வுலகத்திற்கு அந்நியர் என்றும் இந்த உலகத்தில் கடந்துப்போகிற பிரயாணிகள் என்றும் அறிக்கையிட்டார்கள். அப்படி அறிக்கையிடுகிறவர்கள்தான் மெய்யாலும் சுய தேசத்தை நாடிபோகிறோம் என்று அறிக்கையிடுகிறவர்கள். நீ அவ்விதமான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறாயா?