“உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு.” (சங்கீதம் 37:5).

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய வழியை, நாமே ஏற்படுத்தவும், சரிபடுத்தவும், அதில் நடக்கவும் பிரயாசப்படும் பொழுது அநேக வேளைகளில் நாம் தடுமாறுகிறோம். அதை எவ்விதம் செய்வது என்பதைக் குறித்து குழம்புகிறோம். பல விதங்களில் நம்முடைய காரியங்களானது, நம்முடைய எதிர்ப்பார்ப்புக்கும், எண்ணத்துக்கும் ஏற்றதாக இருப்பதில்லை. ஆனால் இந்த இடத்தில் ஆண்டவர் சொல்லுகிறார், உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவருடைய கரத்தில்,  எதையுமே ஒப்புவிக்க பழகவேண்டும். அவரிடத்தில் நாம் நம்முடைய காரியங்களைக் கொடுத்து, அவர் நமக்காக செயல்படும்படியாக அனுமதிக்க வேண்டும். தேவன் எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையில் வலுக்கட்டயாபடுத்துகிறவரல்ல. நம்முடைய விருப்பத்திற்கு எதிராய் செயல்படுகிறவரும் அல்ல. ஆகவே நம்முடைய வழியை தேவனுக்கு ஒப்புவித்து, அவர் சர்வஞானமுள்ள கர்த்தர். அவர் நம்முடைய வாழ்க்கையின் காரியங்களை எவ்விதமாக அமைத்து செயல்படுத்துவது, நம்முடைய எதிர்காலம் என்ன, எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அடுத்ததாக சொல்லப்படுகிறது,  உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு. தேவன் பேரில் நம்பிக்கையாயிரு. உன் பேரில் அல்ல, அல்லது சூழ்நிலைகளின் பேரில் அல்ல. அவரில் நம்பிக்கையாயிரு. அருமையானவர்களே! வாழ்க்கையின் ஒரு முக்கியமான இரகசியம் இது. நம்முடைய வாழ்க்கையை, எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்புவித்து,  அவர் நமக்காக செயல்படும்படியான செயல்பாட்டுக்காக, நாம் நம்பிக்கையாருப்பது மிக முக்கியம். அப்பொழுது அவரே காரியத்தை வாய்க்கபண்ணுவார் என்று சொல்லப்படுகிறது.  அவ்விதமான காரியம் ஒருவேளை வாய்க்குமா வாய்க்காதே போகுமா, என்பதாக நாம்  எண்ணவேண்டிய அவசியமில்லை. அவர் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று சொல்லப்படுகிறது. அவர் செய்துமுடிப்பார். அநேக வேளைகளில் நாம் பதட்டமடைகிறோம், அவசரப்படுகிறோம், குழம்பிவிடுகிறோம். மாறாக நாம் பொறுமையாக அவருடைய கரத்தில் ஒப்புவித்து, காத்திருக்கும்பொழுது அழகாக அவர் நமக்காகச் செய்வார்.