செப்டம்பர் 28              

“இக்காலத்துப் பாடுகள்”( ரோமர் 8 : 18)

    இக்காலத்து என்று சொல்லப்படுவது ஒரு குறிக்கபட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட என்று பொருள்படும். அது என்றென்றைக்கும் இருக்கும்படியானவைகள் அல்ல. கிறிஸ்தவ வாழ்க்கையில் பாடுகள் பெரிதான பங்கை வகிக்கின்றன. பாடுகள் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒருபோதும் போதிக்கவில்லை. சொல்லப்போனால் உன்னத ஊழியக்காரனாகிய பவுலுக்கும் முள் கொடுக்கப்பட்டிருந்தது.

     பொதுவாக பாடுகள் நாம் விரும்பும்படியானவைகள் அல்ல. அதை மனிதர்களாகிய நாம் ஒருபோதும் விரும்புவதும் இல்லை. ஆனால் தேவன் சிறந்த நோக்கத்திற்கென்று ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவைகளை இணைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு அநேக போலியான போதனைகளில் பாடு இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை வாக்களிக்கப்படுகிறது. பாடுகளுக்கு உடனடி நிவாரணம் என்று அநேக கள்ளப்போதகர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். நீ அவர்களால் ஒரு போதும் ஏமாற்றம் அடையாதே.

    முதலாவது, பாடுகள் உன்னுடைய வாழ்க்கையில் நீ யார் என்பதை உணரச்செய்கிறது. நீ ஒரு பெலவீன பாண்டம் என்று அறியச் செய்கிறது. ஆம்! பவுல் நம்மை மண்பாண்டம் என்று அழைக்கிறார். ஒரு சிறிய கல்லினாலும் அது உடையக்கூடும்.

    இரண்டாவது, அது நாம் தேவனையே சார்ந்து கொள்ள நம்மை ஏவுகிறது. அதில் கடந்துப் போகிற ஒவ்வொரு விசுவாசியும் தாவீதைப்போல ‘ நான் உபத்திரவப்பட்டது நல்லது, அதினால் உமது பிரமாணங்களை கற்றுக்கொள்கிறேன்’ என்று  சொல்லக்கூடியவனாய் இருப்பான். மேலும் அது நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்த உதவுகிறது. நம்மை தேவன் விடுவிக்கும்போது, அவருடைய நாமம் மகிமைப்பட அது ஏதுவாய் இருக்கிறது. அப்போது நாமும் பாடுகளைக்குறித்து முறுமுறுக்காமல் பவுலைப்போல ‘என் பலவீனங்களைக் குறித்தும் மேன்மை பாராட்டுவேன்’ என்று சொல்லக்கூடும். கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவத்திற்கும் அர்த்தம் உண்டு.