ஜனவரி 6

“அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 1:19).

எரேமியா ஊழியத்திற்கு அழைக்கப்பட்டபொழுது, அவர், நான் சிறு பிள்ளையாய் இருக்கிறேன், நான் இந்தப் பணியைச் செய்வதற்கு போதுமான ஞானமற்றவன் என்கிற விதமாய் சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். அப்பொழுது ஆண்டவர், “நீ சிறு பிள்ளை என்று சொல்லாதே” (எரேமியா 1:7) என எரேமியாவிடம் சொல்லுகிறார். நாம் மெய்யாலுமே தேவனுடைய பணிக்குத் தகுதியானவர்கள் என்று சொல்ல முடியாது. நாம் ஒவ்வொருவரும் எரேமியாவைப் போல ஆவிக்குரிய வாழ்க்கையில் காணப்படுகிறோம் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. ஆனால் ஆண்டவர் “உன்னை இரட்சிக்கும்படிக்கு” என்று சொல்லுகிறார். உன்னை காத்துக்கொள்ளும்படிக்கு, பெலப்படுத்தும்படிக்கு, வழிநடத்தும்படிக்கு நான் உன்னுடனே கூட இருக்கிறேன் என்று சொல்லுகிறார். தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற தைரியமும், அவர் நம்மோடிருந்து நம்மைப் பெலப்படுத்த வல்லவராய் இருக்கிறார் என்ற உணர்வும் நமக்கு நிச்சயமாக ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறதாய் இருக்கிறது. தேவன் யோசுவாவை அழைத்தபொழுது, “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (யோசுவா 1:9) என்று சொன்னார்.  தேவன் நம்முடைய வாழ்க்கையில் நமக்குப் பொறுப்பையும் உத்திரவாதத்தையும் கொடுக்கிறது மாத்திரமல்ல, அதற்குரிய பெலத்தையும் கொடுக்கிறவராய் இருக்கிறார். ஆகவே நாம் நம்முடைய வாழ்க்கையில் எதைச் செய்தாலும், ஆண்டவர் நம்மோடுக் கூட இருக்கிறார் என்ற உணர்வோடும், அவர் போதுமான பெலத்தையும் ஒத்தாசையும் தருவார் என்ற விசுவாசத்தோடும், தேவனுடைய கிருபையைச் சார்ந்து கொள்ளுவோம்.