டிசம்பர் 12  

      “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்”(ஏசாயா 35:3).

      தளர்ந்த கைகள் பணி செய்வதில் பாதிப்பையும், தள்ளாடுகிற கால்கள் நடப்பதில் இயலாமையையும் காட்டுகிற பெலவீனங்களாக இருக்கிறது. அருமையான சகோதரனே சகோதரியே உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை அவ்விதமாக இருக்குமானால் தேவன் அதை திடப்படுத்தும் படியாக, பெலப்படுத்தும் படியாக சொல்லுகிறார். ஏசாயா 40:1-2 வது வசனங்களில் “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்”என்று தேவன் சொல்லுகிறார்.

      ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் தளந்த கைகளை திடப்படுத்துங்கள், தள்ளாடுகிற முழங்கால்களை பலப்படுத்துங்கள். ஆவிக்குரிய ஓட்டத்தில் பின்தங்கிப் போகவேண்டிய அவசியமில்லை. ஏனென்று கேட்டால் கர்த்தர் உன்னை பெலப்படுத்துகிறவராக இருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பாக, “அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்”(லூக் 22:43) என்று பார்க்கிறோம்.

      கர்த்தர் உன் கைகளையும், முழங்கால்களையும் பெலப்படுத்துவார் என்று நம்பிக்கையாய் இரு. இன்னுமாக எபிரெயர் 12:12 -ல் “ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி”என்று சொல்லப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையில் மேலான ஒரு ஆவிக்குரிய நிலைக்குள்ளாக கடந்துபோகும் ஆரம்பம் வந்துவிட்டது. பின் தங்கிப்போன வாழ்க்கை நிலை மாறிவிட்டது. தேவனை நோக்கிப்பார். கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலும் மிகப்பெரிய காரியங்களையும் செய்யமுடியும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.