நவம்பர் 5      

“ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்” (ஆபகூக் 3:19).

      இந்த உலகத்தில் உனக்கு ஒன்று கர்த்தர் பெலனாக இருப்பார். அல்லது இந்த உலகத்தையும், மனிதனையும் உன் பெலனாக கொண்டிருப்பாய். நம்முடைய வாழ்க்கையில் எது நம் பெலனாக இருக்கிறது? நாம் கர்த்தரை மாத்திரமே பெலனாகக் கொண்டிருப்போமானால், தேவன் நிச்சயமாக தம் கிருபையை விளங்கப்பண்ணுகிறவராக இருக்கிறார். “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்” (சங்கீதம் 18:1) என்று தாவீது பாடுகிறார். அருமையானவர்களே! நம்முடைய பெலன் எப்பொழுதும் கர்த்தராக மாத்திரம் இருக்கட்டும். அது ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை.

      உன் இருதயத்தை ஆராய்ந்து பார். உன் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சூழ்நிலையில் யாரை உன் பெலனாகக் கொண்டு செயல்படுகிறாய் என்பதை சோதித்துப்பார். கர்த்தரை பெலனாகக் கொண்டிருந்தால்,  “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (சங்கீதம் 27:1) என்று சங்கீதக்காரன் சொல்லுவதைப் போல நீ சொல்லக்கூடும்.

      இந்த உலகத்தில் தேவனைத்  துணையாகக் கொண்டிருக்கிற மனிதன் எதற்குமே பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேவனைத் தன் துணையாகக் கொண்டிராதவன் எல்லாவற்றிற்கும் பயப்படுகிற மனிதனாகவே காணப்படுவான். சூழ்நிலைகள் மாறும் பொழுது மனிதன் உன்னைக் கைவிட்டுவிடுவான். அப்பொழுது உன் நம்பிக்கை முற்றிலும் வீணாய்ப் போய், நீ அஞ்சி வாழுகிற வாழ்க்கையைக் கொண்டிருப்பாய். ஆனால் ஒரு மெய்யான விசுவாசி: “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்”(ஆபகூக் 3:17-18) என்று சொல்லுவான். உன்னால் இவ்விதம் சொல்லமுடியுமா?