மார்ச் 6     

 “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்” (லூக்கா 21:36).

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வருகையைக் குறித்துச் சொல்லிவிட்டு, இந்தக் காரியங்களைக் குறித்துப் பேசுகிறார். இன்றைக்கும் நாம் பலவிதமான போராட்டங்கள், நெருக்கங்களைக் கடந்துபோக வேண்டியதாய் இருக்கிறது. நாம் வாழும் காலம் அவருடைய வருகைக்கு முன்னதான காலங்கள். இந்த உலகம் இன்னும் பாவத்தில் மூழ்குகின்றதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவைகளின் மத்தியில் நாம் அழிந்து போகாதபடிக்கு நம்முடைய வாழ்க்கையில் இவைகளின்று தப்பும்படியாக  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன? எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். நாம் ஜெபத்தோடு ஒவ்வொரு காரியத்தையும் சிந்திக்கிறவர்களாய்க் காணப்பட வேண்டும். “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” (மத்தேயு 6:13). பலவிதமான சோதனைகளை நாம் சந்திக்கும்படியாக இருக்கலாம். குடும்பங்களில் அநேக பிரச்சனைகளைச் சந்திக்கலாம். “உங்கள் எதிராளியான பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான்” என்று வேதம் சொல்லுகிறது.  ஆகவே நாம் ஜெபம் பண்ணி விழித்திருக்கவில்லை என்றால், நிதானத்தோடு செயல்படவில்லை என்றால்  விழுந்துவிட ஏதுவுண்டு. குடும்பங்களில் பெற்றோர்கள் அதிக ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகளுக்காக விழித்திருந்து ஜெபிப்பது அவசியம். சபை மக்களுக்காக ஜெபிப்பது அவசியம். இந்த காலங்களில் நாம் ஜெபித்து விழித்திருக்காவிட்டால்,  பின்னடைவுக்குள்ளாகப் போவோம் என்பதை மறந்துவிடக் கூடாது. உளையான சேற்றிலிருந்து தகுதியற்ற நம்மைத் தேவன் எடுத்திருக்கிறார். ஆண்டவரை முழு இருதயத்தோடும் முழு பெலத்தொடும் முழு மனதோடும் முழு ஆத்துமாவோடும் நேசிப்போம். அப்படிப்பட்ட அன்பு நம்முடைய வாழ்க்கையில் தேவை. ஜெபித்து விழித்திருப்போம்.