ஜனவரி 8

“ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்” (சங்கீதம்107:43).

ஆவிக்குரிய வாழ்க்கையில் உணர்வைக் கொண்டு வாழுகிற வாழ்க்கை மிக அவசியமானது. நாம் எல்லாவற்றிலும் உணர்வுள்ளவர்களாய், ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுகிற காரியங்களைக் குறித்து உணர்ந்து அதின் அடிப்படையில் வாழுகிறவர்களாய்க் காணப்படுவது மிகுந்த ஆசீர்வாதமானதாய் இருக்கும். “இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்?” (ஓசியா 14:9) என்று வேதம் சொல்லுகிறது. இங்கு கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள் என்று வேத வசனம் சொல்லுகின்றது. ஆண்டவருடைய கிருபை எவ்வளவு மேன்மையானது, மகிமையானது, உன்னதமானது என்பதை எந்தளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் உணர்ந்து வாழுகின்றோமோ, அந்தளவுக்கு நாம் ஆண்டவரைக் குறித்து மேன்மை பாராட்டுகிற உணர்வுள்ள மக்களாக வாழுவோம். தகுதியில்லாத நமக்கு ஆண்டவர் காண்பிக்கிற அன்பு, இரக்கம் தயவு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து, நாம் அதற்கு நன்றியுள்ளவர்களாய் காணப்படுவோம். ஆவிக்குரிய உணர்வு என்பது நம்முடைய வாழ்க்கையில் அதிகமாக தேவை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்விதமான  உணர்வுள்ள ஒரு வாழ்க்கை, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு, மிகுந்த முக்கியமான அம்சமாய் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் ஆண்டவருடைய கிருபைகளையும் இரக்கங்களைக் குறித்து மேன்மைபாராட்டவும் இந்த உணர்வுள்ள இருதயத்ம் நமக்குத் தேவை. “மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே, கிருபையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று, என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்” என்று தேவன் சொல்லுகிறார். ஆகவே நாம் இதில் மேன்மை பாராட்டுவது அவசியம். மேலும் இவைகளின் மேல் பிரியமாய் இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே மேன்மைபாராட்டல் நம்மைக் குறித்தல்ல, கர்த்தரைக் குறித்தே எப்பொழுதும் இருக்க வேண்டும்.