மே 9         

“கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:36-39).

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? நம்முடைய வாழ்க்கையில் அந்த அளவுக்கு நாம் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கிறோமா? இந்த இடத்தில் ஒரு பெரிய பட்டியலைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவரோடு இவ்விதமான இணைப்பை கொண்டவர்களாக வாழ்கிறோமா என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இன்றைக்கு கிறிஸ்துவை ஆதாயத்திற்காக மாத்திரம் பின்பற்றக்கூடிய பெருங்கூட்டம் எழும்பி இருக்கிறது. ஆனால் அவருடைய அன்பை மெய்யாலும் நாம் உணர்ந்திருந்தோமானால் மாத்திரமே இவ்விதமாக சொல்ல முடியும். மேலும் இந்த இடத்தில் ஜெயத்தைக் குறித்துப் பேசுகிறார்.

இந்த உலகத்தில் நாம் உலகப்பிரகாரமாக அடையும் ஜெயத்தை அல்ல, ஆவிக்குரிய ஜெயத்தைக் குறித்து பேசுகிறார். மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும்… என்று அவர் மிகப் பெரிய ஒரு பட்டியலையும் இந்த இடத்தில் சேர்கிறார். இவை எல்லாவற்றிலும் நாம் கிறிஸ்துவில் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் காணப்படுவோம் என்று சொல்லுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நாம் ஆண்டவரை ஆதாயத்திற்காக பின்பற்றுவது அல்ல. நம்முடைய வாழ்க்கையில் இயேசுவைப் பின்பற்றுவதினால் என்ன ஆதாயம் பெற்றோம் என்பதைவிட, என்ன இழந்திருக்கிறோம் என்பதைக் குறித்து நாம் சிந்திப்பது மிக நல்லது. அநேகர் இயேசுவை தங்களுக்கு உதவி செய்பவராக, கடன் தொல்லையை நீக்குகிறவராக, சுகத்தைக் கொடுக்கிறவராக மாத்திரமே அறிந்திருக்கிறார்கள். ஆனால் இயேசுவை நீங்கள் இரட்சகராக அறிந்திருகிறீர்களா? உங்களுடைய வாழ்க்கையில் உங்களை இரட்சிக்கும்படி தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தவரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அப்படியானால் மட்டுமே மேலே சொன்னவண்ணமாக உங்களால் சொல்ல முடியும்.