கிருபை சத்திய தின தியானம் 

ஆகஸ்ட் 17                    ஆவியின் சிந்தை                  ரோமர் 8:1-16

“மாம்சசிந்தை மரணம்;

ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்” (ரோமர் 8:6)

       எப்பொழுதும் ஆவிக்குரிய காரியங்களை சிந்திக்கபடியான மனநிலை நமக்குத் தேவை. நம்முடைய இயற்கை மனிதன் எவ்விதமாய் காணப்படுகிறான் என்று சொல்லும்பொழுது, நாம் மாம்ச சிந்தை உடையவர்களாக வாழக்கூடிய மக்கள். ஆனால் தேவ ஆவியானவர் நம்மை உயிர்ப்பிக்கும்பொழுது மாத்திரமே, நாம் ஆவிக்குரிய காரியங்களை சிந்திக்கிறவர்களாக காணப்படுவோம். ஆவிக்குரிய வாழ்க்கை என்பது தேவனுடைய ஆவியின் பெலத்தால் வாழுகிற வாழ்க்கை. பரிசுத்த ஆவியானவரின் பெலமும், கிருபையும், ஒத்தாசையும் இல்லாமல், நாம் இந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழமுடியாது.

        அதுமாத்திரமல்ல, மாம்ச சிந்தை மரணம். எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையில் மாம்ச சிந்தையே மேலோங்க பிரயாசப்படும். ஆனால் நாம் ஆவிக்குரிய சிந்தை உள்ளவர்களாக, மாம்ச சிந்தையை அழிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆவிக்குரிய சிந்தை நம்மில் எப்பொழுதும் காணப்படுவது மிக அவசியமான ஒன்றாகும். பவுல் இன்னுமாக “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” (ரோம் 8:13) என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் மேலோங்கும் சரீர சிந்தைகளை, ஆவியானவரின் பெலத்தைக் கொண்டு அழிக்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

     இன்னுமாக பவுல் “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23) என்று சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மூலமாக நாம் நித்திய ஜீவனைப் பெற்று வாழவேண்டியவர்கள். நாம் ஏன் மாம்ச சிந்தையினால் நித்திய மரணத்தை சுதந்தரிக்க வேண்டும்? தேவன் நமக்கு அநுகிரகம் பாராட்டுகிறவராக இருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்மீது கிருபையும், பொறுமையும் கொண்டவராக இருக்கிறார். ஆகவே அன்பு நிறைந்த அந்த தேவனை நாம் சர்ந்துகொள்ளுவோம். அப்பொழுது ஆவியானவர் நம்முடைய மாம்ச சிந்தையை அழிக்க பெலனைக் கொடுப்பார். சோர்ந்து போகாதே. தேவனுடைய சர்வாயுதங்களைக் கொண்டு போராடு (எபேசியர் 6:11). நித்திய ஜீவன் சுதந்தரித்துக்கொள்.