அக்டோபர் 3      

“இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள்மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்” .(சங்கீதம் 12: 1)

தாவீது இதை ஜெபமாக ஏறெடுக்கிறார். “ஆண்டவரே என்னை நீர் இக்காலத்தில் இரட்சித்துக் கொண்டருளும். நாட்கள் கொடியதாயிருக்கிறது. மெய்யான சத்தியத்தை பின்பற்றுகிறவர்கள் மிக மிகக் குறைவு. ஆண்டவருக்காக வாழ வேண்டும் என்று வாஞ்சையுள்ளவர்கள், வைராக்கியமுள்ளவர்களைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது. மக்கள் மாயையைப் நம்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.” இது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! தாவீதின் அந்த நாட்களில் மாத்திரமல்ல, நம்முடைய நாட்களிலும் அவ்விதமாகவே காலங்கள் கொடியதாயிருக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் தாவீதைப்போல இந்த நாட்களில் ஆண்டவரே, என்னை உம்முடைய வழிக்குள்ளாக காத்துக்கொள்ளும். நான் உமக்காக ஜீவிப்பேன். உம்மையே நேசித்து பின்பற்றுவேன் என்று சொல்ல உன்னில் வாஞ்சை இருக்கிறதா? ஆம்! அவ்விதமான வாஞ்சை நமக்குள் காணப்படவேண்டும். உலகத்தைக் கண்டு அதோடு ஒத்துப்போகவும், உலகமே அப்படிதான் இருக்கிறது, அதின் மத்தியில் நான் ஆண்டவருக்கென்று ஜீவிப்பது முடியாது என்றும் எண்ணுகிறாயா? அது தவறு.

ஒருவேளை நீ பணி செய்யும் இடத்தில், உன்னை சுற்றியிருக்கும்படியான மக்கள் தேவபக்தியற்றவர்களாக இருக்கலாம். ஆனாலும் நீ சோர்ந்துபோகாதே. அங்குதான் உன் வெளிச்சம் இருளில் பிரகாசிக்கிறதைப் போலக் காணப்படவேண்டும். அநேகர் உன்னைப் பார்த்து பரியாசம் பண்ணலாம். ஆனாலும் சோர்ந்துப் போகாதே. ஒவ்வொரு நாளும் நீ அவர்கள் மத்தியில் “தேவனே, என்னை உம்முடைய பிரதிநிதியாக அவர்கள் மத்தியில் வைக்கப்பட்டிருக்கிற வேளையில் நான் உமக்குச் சாட்சியற்றவனாக வாழக்கூடாது. எனக்கு அதற்குண்டான பெலத்தை தாரும். உம்முடைய பெலம் இல்லையென்றால் என்னால் வாழமுடியாது” என்று ஜெபி. தேவன் பெலத்தை கொடுப்பார். தேவன் பிலதெல்பியா சபையைப் பார்த்துச் “ “ உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல்” என்று சொன்னவண்ணம் உனக்குச் சொல்லுவார். உன்னை வெட்கப்படுத்தமாட்டார்.