கிருபை சத்திய தின தியானம்

மே 18               ஆவிக்குரிய குடும்பம்          யோபு 1 ; 1 – 5

“யோபு ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனை தங்கள்

இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி,

பரிசுத்தப்படுத்தி அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய

இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துவான்” (யோபு 1 : 5 )

       யோபு தன் பிள்ளைகளின் காரியத்தில் எவ்வளவு விழிப்பாக செயல்பட்டிருக்கிறான் பாருங்கள்! அவனுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து, அக்கறை எடுத்துக்கொண்டான். இன்றைக்கு அநேகம் பெற்றோர்கள் அப்படி அக்கறை எடுக்காததினால், எத்தனை பிள்ளைகள் பிற்காலத்தில் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய படிப்பு, அவர்களுக்கு பணம்சேர்ப்பது, நல்ல வேலைவாங்குவது, நல்ல திருமணம் செய்யவேண்டுமென்பது போன்ற உலகபிரகாரமான காரியங்களில் அதிக விழிப்போடு செயல்படுகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய  காரியங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நீ அவ்விதம் உன்னுடைய பிள்ளைகளுக்குச் செய்து கொண்டிருக்கிறாயா? உன் பிள்ளைகளே, உன்னை பிற்காலங்களில் குற்றஞ்சாட்டுவார்கள் என்பதை மறவாதே.

     நமது பிள்ளைகள் சிறுபிராயத்திலிருந்தே அவ்விதம் ஆவிக்குரிய  வாழ்க்கையில் நடத்தப்படவேண்டும். அதில் குடும்ப ஜெபம், ஆலயத்திற்கு ஒழுங்காக அழைத்துச்செல்லுதல், ஓய்வு நாள் பாடாசாலைகளில் ஒழுங்காக கலந்துக்கொள்ளுதல் மிக முக்கியமானவைகள் என்பதை உணர்ந்து, அவர்கள் அதில் பங்குபெற காலங்களையும் நேரங்களையும் ஒதுக்கவேண்டும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் குடும்ப ஜெபங்கள் செய்வது நின்றுபோய்விட்டது அல்லது அதை தினமும் செய்வதில்லை. நினைத்தால் அல்லது நேரம் கிடைத்தால் செய்வார்கள். அப்படி செய்வீர்களானால் குடும்ப பலிபீடத்தை நீங்கள் இடித்துப்போடுகிறீர்கள். தேவ ஆசீர்வாதம் அங்கு எப்படி இருக்கும்?

      மறுபடியும் குடும்ப பலிபீடத்தை செப்பனிடுங்கள். குடும்ப ஜெபங்களில் கர்த்தரைத் துதித்து பாடுங்கள். இவ்விதமான தின தியானங்களை வாசித்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்கள் குடும்பங்களை, உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்து வழிநடத்துவார். கர்த்தருடைய சமாதானம் அந்தக் குடும்பத்தில் காணப்படும்.