கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட்  22                           சத்திய   ஆவி                 யோவான் 16:1 -13

“சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும்

உங்களை நடத்துவார்” (யோவான்  16:13)

    தேவனுடைய சத்தியத்தை அறிந்து அதன்படி வாழ விரும்புகிறவர்களுக்கு இது எவ்வளவு மகத்துவமான வாக்குத்தத்தம். சத்தியம் கடலைப்போன்றது. அந்த அளவுக்கு விசாலமானது, ஆழமானது. சத்தியம் ஒரு பிரமாண்டமான மாளிகை போன்றது. ஆனால் இதில் நாமாகவே சென்று எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது. ஆகவே நமக்கு ஒரு வழிகாட்டி நம்மோடு இருந்து நம்மை நடத்தும்படி இருக்கிறார். அவரே தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்.

    ‘சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’ (யோவான் 8:32) சத்தியத்தை அறிவது நமக்கு இவ்வளவு பெரிதான விடுதலைக்குள் நம்மை வழிநடத்துமானால், நாம் அதை நாடித் தேடவேண்டுமல்லவா? ஆகவே இதற்கு உதவியாக பரிசுத்த ஆவியானவரின் துணையை நாம் நாடவேண்டும். நாம் அவருடைய உதவியில்லாமல் சத்தியத்தை விளங்கிக்கொள்ளமுடியாது என்பதை உணர்ந்தவர்களாய் அவரிடத்தில் செல்வோமாக. நம்மைத் தாழ்த்தி நம்முடைய அறியாமையை அறிக்கையிடுவோமாக. அப்பொழுது அவர் நமக்கு போதிப்பார்.

    தேவனுடைய வார்த்தையை போதிக்கிற ஊழியர்களும், கேட்கிற மக்களும் இந்த மகத்துவமான சத்தியத்தை அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் துணையை எப்பொழுதும் நாடவேண்டும். அப்பொழுது அவர் அவர்கள் கண்களைத் தெளிவாக்குவார். இந்த சத்தியத்தை இயற்றிய அவரைபோல வேறு யார் கர்த்தருடைய வார்த்தையை நமக்கு விளக்கிக் காட்ட முடியும்? அவருடைய இன்னுமொரு பெயர் ‘சத்திய ஆவி’ (யோவான் 14:17). ‘அவர் வந்து பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தைக்குறித்தும் உலகத்தை கண்டித்து உணர்த்துவார்’ (யோவான் 16:8) அன்பான விசுவாசியே! நீ ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்பொழுது, ஆவியானவரின் ஒத்தாசையை நாடு. அவர் இந்த மகத்துவமான வெளிச்சத்தைத் தந்து உன்னை அனுதினமும் நடத்துவார். நீ அவ்விதம் நாடுகிறாயா?