“நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே” (அப்போஸ்தலர் 18:9).
பவுல் கொரிந்து பட்டணதிற்கு வந்த பொழுது ஆண்டவர் இவ்விதமாகப் பேசுகிறார். பவுல் அத்தேனே பட்டனத்திலிருந்து அந்தக் கொரிந்து பட்டனத்திற்கு வருகிறார். அத்தேனே பட்டணத்தில் அதிகமாக ஊழியத்தின் பலனைப் பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை. ஆகவே இவ்விதமான சூழ்நிலையில் பவுல் கொரிந்து பட்டணத்திற்கு வருகிறார். இங்கு பலனைக் காண்போமோ என்று மனதில் பயம்கொண்டவராய் காணப்பட்டார். அப்போதுதான் ஆண்டவர் பவுலுக்கு இந்த வார்த்தைகளைப் பேசுகிறார். நாம் கர்த்தருடைய சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. தவறான காரியங்களைப் பேசுவதற்கே நாம் பயப்பட வேண்டும். மேலும் 10 -ம் வசனத்தில் “நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.” என்ன ஒரு ஆறுதலான காரியத்தை பவுலுக்கு ஆண்டவர் செய்கிறார்! தேவன் நம்மோடு கூட இருப்பார் என்றால் இந்த உலக மனிதர்கள் நமக்கு என்ன செய்யக்கூடும்? மனித பயத்தை நாம் நம்மிலிருந்து நீக்கிப்போட வேண்டும். அநேக வேளைகளில் ஆண்டவருக்கென்று வாழுகிற வாழ்க்கையில் நாம் பின்னடைவு கொண்டவர்களாய்க் காணப்படுகிறோம். ஆனால் தேவன் பவுலிடம் இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்று சொல்லுகிறார். என்ன ஒரு அருமையான ஆறுதலின் வார்த்தையாக ஆண்டவர் பவுலுக்குக் கொடுக்கிறார்! ஒருவேளை உங்கள் ஊழியத்தில் பலனில்லை என்று சோர்ந்திருப்பீர்கள் என்றால் பயப்படாதிருங்கள். நீங்கள் சோர்ந்துபோக வேண்டிய அவசியமில்லை. தேவன் ஏற்றக் காலத்தில் நல்ல ஆத்தும அறுவடையை நீங்கள் உழைக்கும்படியான இடத்தில் கொடுத்து, உங்களை ஆண்டவர் கனப்படுத்துவார். தம்முடைய அருமையான ஊழியத்தைக் கட்டி எழுப்புவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.