கிருபை சத்திய தின தியானம்

ஜனவரி 2                          சமாதானம் நதியைப்போலிருக்கும்                ஏசா 48:1-19

‘ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்;

அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி

சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்’ (ஏசாயா 48:18).

           அன்பான சகோதரனே! சகோதரியே! நதியைப் போன்ற சமாதானத்தை தேவன் தம்முடைய மக்களுக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். இது மெய்யாலும் சாத்தியமாகுமா? என்று எண்ணலாம். ஆனாலும் தேவன் இதற்கு சாத்தியமாகக் கூடிய ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார். அது என்னவென்றால், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவது தான். தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொள்ளுவோம். அதைச் சார்ந்து கொள்ளுவோம். அப்பொழுது வாக்கு மாறாத தேவன், நதியைப் போன்ற சமாதானத்தைக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

          இன்னுமாக ஏசாயா 66:22 -ல் ‘கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்’ என்று சொல்லுகிறார். அன்பானவர்களே! நாம் தேவனுடைய குழந்தைகளைப் போல இருப்பதினால், கர்த்தர் அவ்விதமாகவே நம்மில் அன்புகூருவதினால், சமாதானத்தை நதியைப் போல கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, கர்த்தர் இடுப்பில் வைத்து நம்மை சுமக்கவும், முழங்காலில் வைத்து தாலாட்டவும் செய்கிறார்.

          இன்னுமாக, சங்கீதம் 119:165 வது வசனத்தில் ‘உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை’ என்று சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தையை நேசித்து அவைகளைக் கைக்கொள்ளுவோமாக. அப்பொழுது கர்த்தர் சமாதானத்தையும், இடறலற்ற வாழ்க்கையும் நமக்கு கட்டளையிடுவார்.