கிருபை சத்திய தின தியானம்

பிப்ரவரி 28                 பாவத்தின் ஊற்று               நீதி 18:1-24

“அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட

சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய

விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்” (நீதி 18:19).

       அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபத்தை அடக்குவது என்பது கடினமான காரியமாகும். அதாவது அரணால் பாதுகாக்கப்பட்ட பெரிய பட்டணத்தைக் கூட வசப்படுத்திவிடலாம் ஆனால், கோபம் கொண்ட மனிதனை வசப்படுத்துவது கூடாத காரியம் என்கிறது வேதம். கோபம் எப்பொழுதும் கடினமானதும், கொடிய தன்மையும் கொண்டது என்பதை மறவாதே. ஆகவேதான் அவர்களுடைய விரோதங்கள் கோட்டையின் தாழ்ப்பாள்கள் போல இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை உடைப்பது என்பது கடினமான ஒன்று.  
       “இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள்” (அப் 15:39) என்று சொல்லப்படுகிறது. பவுலுக்கும், பர்னபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடின் காரணமாக கடும் கோபம் ஏற்பட்டதினால், ஊழியத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தார்கள் என்று பார்க்கிறோம். கோபம் மனித உறவுகளை பந்தாடுகிறது. கோபம் ஒருவர்மேல் ஒருவர் விரோதிக்கவும் செய்கிறது. கோபம் நம்மை ஆளுகிற பொழுது அதனை மேற்கொள்ளுவது என்பது அபாயமே. ஆகவேதான் வேதம், “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்” (நீதி 16:32) என்று சொல்லுகிறது.
       பொதுவாக கோபமானது தனது வீரியத்தைக் காண்பிக்கிறதாக இருந்தாலும், அதின் முடிவு முற்றிலும் தோல்வியே. அதினால் தான் பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் மேன்மை பொருந்தினவன் என்றும், பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன் என்று சொல்லும்பொழுது, தன் கோபத்தை அடக்கி ஆளவேண்டும் என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது. கோபத்தை அடக்க முடியாத அளவுக்கு நம் மாம்ச அளவுகள் மேலே எழும்புமானால், நம்முடைய ஆவிக்குரிய கனி என்பது கேள்வி குறியே. அது அவனின் முரட்டாட்டமான இருதயத்தையேக் காண்பிக்கிறது. கோபம் கொல்லும் கொடிய பாவம் என்பதை மறவாதே. கோபப்படும் முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.