கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 9                         இரட்சிப்பின் ஊற்று                                     ஏசாயா 12 ; 1 – 6

’நீங்கள் இரட்சிப்பின் ஊற்றிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்’ (ஏசாயா 12 : 3)

            இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் இவ்விதம் ஆரம்பிக்கப்படுகிறது. ‘நீர் என்மேல் கெம்பீரமாயிருந்தீர், ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்’ (ஏசாயா 12 : 1 ). அன்பானவர்களே! நீங்களும் கடந்த நாட்களில், தேவன் உங்களுக்கு கிருபையளிக்க மறந்ததைப்போல உணர்ந்திருக்கலாம். அநேக வேளைகளில் உங்கள் ஜெபம் தேவனால் கேட்கபடாமல் போவதுப்போல இருந்திருக்கலாம். ஆனால் இந்தக்காரியங்கள் உன்னைச் சோர்வுற செய்ய வேண்டியதில்லை. தேவனுடைய கோபம் என்றென்றைக்கும் உன்மேல் இருக்காது. நீ தேவனுடைய பிள்ளையானால், தேவன் உன்னை நேசிக்கிறார் என்பதில் சிறிதேனும் சந்தேகம் கொள்ளாதே.  தேவனுடைய கோபம் நீங்கும் வேளை உண்டு. ஆனால், நீ தேவனைக் கோபப்படுத்தக்கூடிய காரியங்கள் உன்னிடத்தில் உண்டா என்று ஆராய்ந்து பார்த்து தேவனிடத்தில் திரும்புவது உன் ஆத்துமாவுக்கு நல்லது. தேவன் தம்முடைய கோபத்தை நீக்குவது மட்டுமல்லாது, அவர் உன்னைத் தேற்றுவார்.

            இப்பொழுது உங்கள் நிலை மாறிவிட்டது. நீங்கள் தேவனுடைய இரட்சிப்பின் ஊற்றண்டை செல்லுங்கள் . இந்த ஊற்று, என்றென்றும் சுரக்கும் நித்திய ஊற்றாய் இருக்கிறது. இன்றைக்குக் கடுமையான கோடை நாட்களில் அதிகமாய் நீர் ஊறும் ஊற்றுகளும் வறண்டுவிடுகின்றன. ஆனால் தேவனுடைய இரட்சிப்பின் ஊற்று ஒரு காலமும் வற்றாது. எந்த ஒரு பாவியையும் இரட்சிக்கும் தேவ வல்லமைதான் இந்த ஊற்று. நீங்கள் இதை மொள்ளும்போது எப்படி மொள்ளுவீர்கள்? மகிழ்சியோடு மொள்ளுவீர்கள்.

            இரட்சிப்பு ஒரு மனிதனில் மகிழ்சியைக் கொடுக்கிறது. பாவம் துக்கத்தைக் கொடுக்கும். ஆனால் இரட்சிப்போ மகிழ்சியைக் கொடுக்கும். இந்த ஊற்றின் நீர், உன் ஆத்தும தாகத்தைத் தீர்த்து திருப்தியைக் கொடுக்கும். அன்பானவர்களே! நீங்கள் எவ்வளவாய் இந்த ஊற்றிலிருந்து நீரை மொண்டு பருகமுடியுமோ அவ்வளவாக பருகுங்கள்.