கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 1                    ஆத்தும ஆகாரம்            மத்தேயு   4:1-11

“மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,

தேவனுடைய வாயிலிருந்துப் புறப்படுகிற

ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”(மத் 4:4)

    ஆவிக்குரிய வாழ்க்கை அனுதினமும் ஆவியில் பிழைத்திருந்து வாழும்படியான ஒன்று. எவ்விதம் சரீர வாழ்க்கையில் பலத்தோடும் ஆரோக்கியத்தோடும் ஜீவிக்க சத்துள்ள ஆகாரம் தேவையோ, அவ்விதமாக நாம் ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ ஆவிக்குரிய ஆகாரம் தேவை. தேவனுடைய வார்த்தையே ஆவிக்குரிய வாழ்க்கைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆத்தும ஆகாரம். இதை நாம் அனுதினமும் உட்கொண்டு வாழ்வது மிக அவசியம். இன்றைக்கு அநேகர் இந்த ஆகாரத்தை புறக்கணிப்பதால் ஆவிக்குரிய பெலனற்றவர்களாய் இருக்கிறார்கள்.

    ஒரு வேளை நீ தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிடவில்லையென்றால் பெலன் இழந்து தளர்ந்துபோவாய். அந்த விதமாகவே தொடர்ந்து ஆத்தும ஆகாரத்தை உட்கொள்ளவில்லையென்றாலும் ஆத்துமாவில் பெலனற்று இருப்பாய். பாவத்தை எதிர்த்து நிற்க உன்னில் பெலன் இருக்காது. வெகு சீக்கிரத்தில் நீ பாவ சுபாவங்களின் வலையில் விழுவாய். நீதியைச் செய்ய, பரிசுத்த வாழ்க்கை வாழ உன்னில் வாஞ்சை இருக்காது. தாவீது தான் பாவம் செய்யாதப்படிக்கு தேவனுடைய வார்த்தையை தன் இருதயத்தில் வைத்துவைத்தேன் என்று சொல்லுகிறார் (சங்கீதம் 119:11)

    சரீர பெலவீனன் மகிழ்ச்சியுள்ளவனாய்க் காணப்படமாட்டான். எந்த நேரத்திலும் சோர்ந்து, தளர்ந்தே காணப்படுவான். அவ்விதமாகவே நீ தேவனுடைய வார்த்தையை அனுதினமும் உட்கொள்ளவில்லையென்றால், ஆவியில் மகிழ்ச்சியுள்ளவனாய் இருக்கமாட்டாய். ஆகவே தினமும் தேவனுடைய வார்த்தையை வாசி, தியானி, மனப்பாடம் செய், உன் இருதயத்தில் பதிய வை. அப்பொழுது ஆவிக்குரிய பெலவானாய் இருப்பாய்.

    சாப்பிடுவதற்காக எப்படி நேரம் எடுத்து சமைக்கிறாயோ,சாப்பிடுகிறாயோ, அப்படியே ஆத்தும ஆகாரத்திற்கென்று நேரத்தை ஒதுக்கப் பழகு. நான் இன்றைக்கு தேவனுடைய வார்த்தையிலிருந்து புதிதாய் ஏதாகிலும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வாசி. தேவன் அப்பொழுது உன்னைப் போஷித்துப் பெலப்படுத்துவார்.