நவம்பர் 10  

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்” (தானியேல் 3:17).

      சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்கிற தேவ மனிதர்களுடைய விசுவாசத்தைப் பாருங்கள். வேதத்தில் காணப்படுகின்ற இவர்களின் விசுவாசமானது அநேகருக்கு சாட்சியாக இன்றைக்கும் காணப்படுகின்றது. விசுவாசமற்று வாழுகிற இன்றைய கிறிஸ்தவ தலைமுறையினர் தேவ பயமற்று வாழுகிறார்கள். இன்றைய கிறிஸ்தவர்கள் தாங்கள் தேவனை ஆராதிக்கிறோம் என்று சொல்லி உலகத்தை தொழுதுகொள்ளுகிறவர்கள். இந்த மூன்று பேரும் (சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ) தாங்கள் ஆராதிக்கிற தேவன் இன்னாரென்று அறிந்திருந்தார்கள்.

      இன்றைக்கு நாம் எதிர்மாறாக தோன்றுகிற சிறிய காரியங்களிலும்,  நம்முடைய விசுவாசமானது கானல்நீரைப் போல மறைந்துவிடுகிறது. ஒரு மெய் விசுவாசி என்பவன்: “யாரை நான் விசுவாசிக்கிறேன்” என்பதை அறிந்திருப்பான். ஆகவே அவன் எந்தவொரு சூழ்நிலையிலும் அவன்: இதிலிருந்து தேவன் என்னை கடந்துபோகப் பண்ணுவார் என்பதை நிச்சயத்து காணப்படுவான். இன்றைக்கு நாம், நம் வாழ்க்கையை எப்பொழுதும் பயத்துடனே கடந்து செல்லுகிறோம். காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், விசுவாசத்தில் பெலவீனமாய்க் காணப்படுகிறோம். ஆனால் ஒரு கிறிஸ்தவன்:      “இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்” (ஏசாயா 12:2) என்று சொல்லுவான்.

      சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் புறஜாதியார் மத்தியில் தாங்கள் ஆராதிக்கிற தேவன் யார் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். அப்பொழுது பாபிலோன் ராஜாவும், அந்த மக்களும் இவரே மெய்யான தேவன் என்பதை அறிந்தார்கள். ஆகவேதான் புறஜாதியான நேபுகாத்நேச்சார் ராஜா: “இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை” (தானி 3:29) என்று சாட்சியிட்டான். நாமும் கூட அவ்விதமான விசுவாச வாழ்க்கையைக் கொண்டிருப்பது மிக அவசியமானது. நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற பிரச்சனைகள் நம்மை அழிக்கும்படியாக அல்ல. அது மற்றவர்களுக்கு சாட்சியாகவும், விசுவாசத்தில் நாம் உறுதிப்படவும், தேவனுக்கு மகிமை உண்டாகவுமே தேவன் அதை அனுமதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்.