“நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏரேமியா 31:16).
ஏன் இவ்விதமாக தேவன் அழாதபடிக்கும், கண்ணீர் விடாதபடிக்கும் உன்னை காத்துக்கொள் என்று சொல்லுகிறார். ஏனென்றால் பல சமயங்களில் நமக்கு நேரிடுகிற துன்பங்கள், பாடுகள் மத்தியில் அவை எல்லைக்கு அப்பாற்பட்டதாய் இருக்கும்பொழுது அழுவதற்கும், கண்ணீர்விடுகிறதற்கும் வாய்ப்புண்டு. ஆனால் ஆண்டவர் இந்த இடத்தில் அவ்விதமாக கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களை காத்துக்கொள் என்று சொல்லுகிறார். அடுத்த வசனத்தில் ஏனென்று சொல்லுகிறார் உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார், அருமையானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குள்ளாக வாழுகிற வாழ்க்கையின் மிகச்சிறிய காரியத்திற்கும் பலனுண்டு. அதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் அநேக வேளைகளில் நாம் நம்முடைய வாழ்க்கையில், நாம் எவ்வளவு தான் தேவனுக்கென்று வாழ்ந்தாலும், ஒருவேளை எந்த விதமான பலன் இல்லாததைப்போலக் காணப்படலாம் . ஆனால் வேதம் சொல்லுகிறது பலன் உண்டு. வேதம் இன்னுமாய் சொல்லுகின்ற காரியம், உன்னுடைய வாழ்க்கையில் நீ உன்னுடைய கிரியைகளை நெகிழவிடாதே என்று சொல்லுகிறார். ஆகவே கர்த்தருக்குள்ளான கிரியைகளை நாம் ஒருநாளும் நெகிழவிடவேண்டிய அவசியமில்லை. அருமையானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் ஒருவேளை பாடுகளின் வழியாய், துன்பங்களின் வழியாய் கடந்துபோனாலும், வேதம் சொல்லுகிறது, நீ உன்னுடைய கண்ணீரையும், அழுகையும் நீ அடக்கிக்கொள். ஏனென்று கேட்டால் உன்னுடைய கிரியைகளுக்குக் கர்த்தர் பலனை வைத்திருக்கிறார். ஒருவேளை இந்த உலகத்தில் பாடுகள் இருக்கலாம். ஆனால் வேதம் சொல்லுகிறது கர்த்தர் தம்முடைய பிள்ளைக்களுக்கென்று ஆயத்தப்படுத்தினவைகளைக் கண் கண்டதும் இல்லை. காது கேட்டதும் இல்லை. இவ்வளவு உன்னதமான மகிமையான காரியங்களை தேவன் நமக்கு வைத்திருக்கும்பொழுது இந்த அற்பமான உலகத்தின் காரியங்களினால், நாம் சோர்ந்துபோகாதாபடிக்கு தைரியமாய் கடந்துசெல்வோம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் நமக்குரிய பலனைக் கட்டாயம் தந்து ஆதரிப்பார், ஆசிர்வதிப்பார்.