ஜூன் 2            

“நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்” (1 கொரி 7:23).

ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டவரால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர். அவர்களுடைய வாழ்க்கையில் பாவத்திற்கு அடிமைப்பட்டிருந்தவர்களை, ஆண்டவர் விடுதலையாக்கி மீட்டுக்கொண்டார். அவருக்கென்று அடிமையாக வாழும்படி, அவர் தம்முடைய உன்னதமான பலியைச் செலுத்தி மீட்டுக்கொண்டார். அவர் மனிதனை பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டுக்கொண்டார். சிலுவையில் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி கிரயத்தை செலுத்தி தனக்கென்று அவர் அவர்களைச் சுதந்தரித்துக் கொண்டார். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தேவனை மகிமைப்படுத்தும்படி தெரிந்துகொண்ட ஒரு பாத்திரமாக நீங்கள் வாழ்வதே எதிர்பார்க்கப்படுகிற தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. ஒரு காலத்தில் நீங்கள் மனசும் மாம்சமும் விரும்பினதைச் செய்து கொண்டிருந்தீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள்  மாமிசத்திற்கு அடிமைப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் உங்களுடைய பரிதாப நிலையிலிருந்து உங்களை மீட்டுக் கொண்டு, விடுதலையாக்கி உங்களுடைய அவல நிலையை மாற்றினார். இப்பொழுது அவருடைய பிள்ளைகளாக உங்களை ஏற்றுக்கொண்டார்.

இவ்விதமாக மகத்துவமான அன்பைப் பெற்றிருப்பதால் நீங்கள் அவருக்கென்று வாழ வேண்டும். அவரிடத்தில் நீங்கள் அன்புகூர்ந்து அவர் எதிர்பார்க்கிற காரியத்தை நிறைவேற்றும்படியாக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் மனிதனுக்கு அடிமையாகக் கூடாது. மனித பாரம்பரியத்திற்கும், மனிதனுடைய வழக்கத்திற்கும், விழுந்துபோன மனிதனுடைய வழிமுறைக்கும் உங்களை உட்படுத்திக்கொள்ளக் கூடாது. வாழ்க்கையில் நீங்கள் அவருடைய வார்த்தையினால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும். சில கிறிஸ்தவப் போதகர்கள் தங்களுக்கென்று மக்களை அடிமைகளாக்கி கொள்ளுகிற காரியம் இருக்கிறது. மக்களை கிறிஸ்துவின் அடிமைகளாக மாற்றாமல் தங்களின் அடிமைகளாக மாற்றி, உபயோகப்படுத்துவது மிகப் பரிதாபமான காரியம். அவர்கள் வேதத்தின் படி போதிப்பதில்லை. கிறிஸ்துவின் பக்கமாக அவர்கள் வழி நடத்தப்படுவதில்லை. கிறிஸ்தவம் என்ற பெயரில் அவர்கள் எஜமான்களாகவும் விசுவாசிகளை அடிமைகளாகவும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கிறிஸ்துவிற்கு அடிமை. கிறிஸ்தவத்துக்கு அல்ல என்பதை மறவாதீர்கள்.