“இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” (சங்கீதம் 51:5).

தாவீது தன்னுடைய வாழ்க்கையில் பாவம் செய்த பின்பு, நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக அவருடைய பாவத்தை உணர்த்தப்பட்ட பொழுது, இந்த சங்கீதத்தை பாவ அறிக்கையாக எழுதி இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறார். அதாவது இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் பாவத்தோடு  பிறக்கிறான். அதாவது துர்க்குணம் என்பது கர்ப்பம் உருவான போதே அவனோடு இணைந்து உருவாகிறது. ‘என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்’ என்று சொல்லுவது தாய்-தகப்பன் செய்த பாவத்தினால் நான் பிறந்தேன் என்பதல்ல. பாவத் தன்மையோடு கூடவே நான் உருவக்கப்பட்டேன் என்று ஆழமான காரியத்தை வெளிப்படுத்துகிறார். நாம் பாவம் செய்வதினால் பாவிகள்  அல்ல. நாம்  பாவிகளாக இருப்பதினாலேயே பாவம் செய்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகவேதான் நம்முடைய வாழ்க்கையில் நாம் பாவத்திலும், அக்கிரமத்திலும் மரித்துப் போனவர்கள், தேவனைத் தேட உணர்வற்றவர்கள் என்று வேதம் சொல்லுகிறது.

இன்னும் “துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்” (சங்கீதம் 58:3) என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் பாவத்தைக் கொண்டவனாகவே பிறக்கிறான். அவனுக்கு மீட்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் செலுத்தப்பட்ட பலி மாத்திரமே. தாயின் வயிற்றில் இருந்து பிறந்தது முதல் பொய் சொல்லி வழிதப்பி போகிறார்கள். ஆகவே அவன் ஆத்துமாவில் மரித்துப் போனவன். ஆனால் ஆண்டவரோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் தம்முடைய கிருபையினால் அவனை இரட்சித்து பாவத்தினின்று விடுதலை அளிக்கிறார். சிலுவையின் பரிகாரத்தின் மூலம் இரட்சிப்பு அவனுக்குக் கிடைக்கிறது.