ஜனவரி 23

 “யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்” (ஏசாயா 46:3).

ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் தாங்கினார். ஆகவே நம்மை ஆரம்பத்திலிருந்து தாங்கிக் காத்து நடத்திவருகிற கர்த்தர், நம்மை நடுவில் கைவிட்டுவிடுவாரா? அநேக வேளைகளில் தேவன் நம்மைக் கைவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் நாம் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். தேவன் நம்மைத் தெரிந்துக்கொண்டவர். ஆகவே அவர் ஒருக்காலும் அவ்விதமாக செயல்படமாட்டார் என்பதைத் தெரிந்துக்கொள்ளுவோம். அவர் நம்மை அழைத்தவர். நம்மை நிச்சயமாக நீதியின் பாதையில்  நடத்துவார். “இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” (ஏசாயா 48:17) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் கடைசிமட்டும் நம்மை வழிநடத்தும் ஒரு தேவனைக் கொண்டிருக்கிறோம். நம்மை ஒருநாளும் அவர் கைவிடமாட்டார். நம்முடைய சூழ்நிலைகள் மாறலாம். நம் உணர்வுகள் மாறலாம், ஆனாலும் தேவன் நம்மைக் கைவிடுகிறதில்லை. அவர் தம்முடைய திட்டத்தை மாற்றிக்கொள்வதுமில்லை.  அவர் நம்முடைய வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மையுள்ளவராக இருந்து, நம்மைப் பெலப்படுத்துவார். ஆண்டவர் சொல்லுகிற காரியங்களைக் குறித்து நாம் சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு நாம் எண்ணுவோமென்றால் அது நம் பெலவீனமே. ஆண்டவர் அவ்விதமாகச் செய்கிறவர் அல்ல. ஆகவே நாம் தேவனைச் சார்ந்து கொள்ளுவோம். அவர் நிச்சயமாக நம்மைத் தாங்கிச் சுமந்து வழிநடத்துவார்.