கிருபை சத்திய தின தியானம்
செப்டம்பர் 9 பாவம் சங்கீதம் 51:1-10
“தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து”(சங்கீதம் 51:4)
இன்று பாவத்தைக் குறித்த உணர்வற்ற சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைவிட பேராபத்து என்னவென்றால் தேவ ஆலயங்களில், சபைகளில் மெய்யாலும் பாவத்தைக் கண்டித்து உணர்த்தும் பிரசங்கங்கள் செய்யப்படுவதில்லை.
ஒரு குஷ்டரோகி அடுப்பில் சமைக்கும்போதோ அல்லது ஏதாகிலும் பணி செய்யும்போதோ அதினுடைய வெப்பத்தன்மையை, சூட்டை தம் கைகளில் உணராமல் இருப்பது அதிகமான பாதிப்பை அவன் விரலில் ஏற்படுத்துகிறது. எந்த துணியும் இல்லாமல் அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தை சர்வ சாதாரணமாக பிடித்து கீழே வைப்பான். அவன் கால்களிலும் அவ்விதமாகவே உணரும் தன்மை இல்லாததால் கல்லுகளில் கால்கள் இடித்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆனால் அதைவிட கொடியது, பாவத்தை உணரக்கூடாத தன்மை. இது மகா பெரிய தீமையை, பாதிப்பை உன் ஆத்துமாவில் ஏற்படுத்துகிறது. உன் ஆத்துமாவை கறைப்படுத்துகிறது. தேவனுக்கும் உனக்கும் உள்ள உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது உனக்கு இழுக்கேயன்றி ஒருக்காலும் ஆசீர்வாதமாக இருக்காது. பாவம் உன் ஆத்துமாவை பலவீனப்படுத்துகிறது. புறையோடின புண்ணாய் உன்னில் இருக்கிறது.
நீ செய்யும் எந்த ஒரு பாவமும் தேவனுக்கு எதிரானது, விரோதமானது. ஒரு மனிதன் தேவனுக்கு விரோதமாக எழும்பி செயல்படமுடியுமா? நீ தேவனுடைய பிள்ளையாய் பாவத்தைக் குறித்து உணராமல் இருக்கும்போது அது தேவனை துக்கப்படுத்துகிறது. பாவம் ஆத்தும மகிழ்ச்சியை அழித்துப்போடுகிறது. உனக்கும் தேவனுக்கும் பிளவுண்டாக்குகிறது.
ஆனால் நம்முடைய பாவத்தை உணர்ந்து அதைக்குறித்து வருத்தப்பட்டு தேவனிடத்தில் மன்னிப்பு கேட்கும்போது, தேவன் மன்னிக்கிறார். தேவனோடு உள்ள உறவு புதுப்பிக்கப்படுகிறது. பாவத்தை மறைக்கிறவன் அல்ல, அதை அறிக்கைச்செய்து விட்டுவிடும் மனிதன் தேவனிடத்தில் இரக்கம் பெறுவான் (நீதி 28:13) .