கிருபை சத்திய தின தியானம்
மே 5 மௌனமாயிருங்கள் செப்பனியா 1 : 1 – 10
’கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்’. (செப்பனியா 1 : 7)
நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருப்பதில் பெரிதான ஆசீர்வாதமிருக்கிறது. அநேகர் வாழ்க்கையில் சந்திக்கும் திடீர் சோதனைகளின் மத்தியில் கலங்கிப்போவதுண்டு. எதிர்பாராத விபத்து, வியாதி, மரணம், பணநெருக்கம் ஆகியவைகளினால் குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. அவ்விதமான வேளைகளில் தேவனிடத்தில் சென்று மௌனமாயிரு. அமைதியாயிரு. அது மிகவும் அலசடிப்படும் மனதுக்கு உண்மையிலேயே ஆறுதலாக இருக்கும். ‘கர்த்தரோவென்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக் கடவது’ (ஆபகூக் 2 : 20).
ஏன் மௌனமாயிருக்கவேண்டும்? ஆம்! தேவன் இன்றும் ஆளுகை செய்கிறார் என்பதை மறவாதே. அவருடைய சித்தமில்லாமல் ஒன்றும் நடைபெறுவதில்லை. அவர் இந்த சூழ்நிலையையும் அறிந்திருக்கிறார். அவர் சர்வ வல்லவர். அநேக வேளைகளில், நாம் இவ்விதமான நெருக்கமான வேளைகளில் என்ன எண்ணுகிறோம், நினைக்கிறோம்? ‘காரியங்கள் கட்டுப்பாட்டுக்கு மீறிப்போய்விட்டது.’ அது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு மீறிப்போயிருக்கலாம். ஆனால் தேவனுடைய கட்டுப்பாட்டிற்கு மீறிப்போகவில்லை. ’அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார். அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை’ (தானியேல் 4 : 35).
நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகிற அனைத்தும் அவருடைய சித்தத்தின்படி அனுமதிக்கப்பட்டதுதான். ஆகவே அவருடைய நோக்கம், சித்தமில்லாமல் நமக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தேவன் அவைகளை நன்மைக்கேதுவாக நடத்துகிறவர் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ‘அமரிக்கையும், நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்’. (ஏசாயா 30 : 15). கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிரு. தேவன் எல்லவற்றையும் நன்மையாகச் செய்து முடிப்பார்.