செப்டம்பர் 18
‘என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது’ (யோபு 9 : 25).
யோபு தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்று சொல்லுகிறார். ஆனால் இந்தக் குறுகிய வாழ்க்கையை நாம் எவ்விதம் கழிக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். இன்றைக்கு அநேகர் எப்போதும் இந்த உலகத்தில் ஜீவித்துக்கொண்டேயிருப்போம் என்ற உணர்வோடு ஜீவிக்கிறார்கள். தங்கள் வாழ்நாள் குறுகியது என்றும் மரணம் நெருக்கமாயிருக்கிறது என்றும் எண்ணுவதில்லை. இந்த வாழ்நாளில் உலகத்துக்கடுத்த காரியங்களில் நான் என்ன சாதிக்கமுடியும், நான் எதைப் பெறமுடியும் என்று அநேகக் காரியங்களில் ஈடுபட்டு செயல்படுகிறார்கள். அல்லது கடைசிக் காலங்களில் தேவனை தேடினால் போதும் என்றும் எண்ணுகிறார்கள். ஆனால் அவ்விதம் எண்ணுகிறவர்களில் அநேகர் தேவனை கண்டுக்கொள்ளாமலேயே மரித்துவிடுகிறார்கள். மரணம் நம்மிடத்தில் சொல்லிவருவதில்லை, எந்த நேரத்திலும் வரலாம். தேவன் ஒருவரே அதன் வேளையை அறிந்திருக்கிறார்.
தேவன் கொடுத்திருக்கிற காலத்தில் தேவனைத் தேடவில்லையென்றால் நம்மைப்போல மதியீனமானவர்கள் யார் இருக்கக்கூடும்? இந்தக் குறுகிய நாட்களில் தேவனுக்காக வாழ்வது ஒன்றுதான் நிலைத்திருக்கும். நீ இந்த உலகத்தில் எவ்வளவுதான் சாதித்தாலும், சம்பாதித்தாலும் அது உனக்கு நித்தியத்திற்கென்று ஒன்றும் பிரயோஜனமாயிருக்காது. உண்மையான விசுவாசி எப்படி சிந்திப்பான்? என்னுடைய நாட்கள் தாவீது சொல்லுவது போல ‘உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும், பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின் மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது. நிலைத்திருப்போம் என்ற நம்பிக்கையில்லை’ (1நாளா 29: 15) என்பதைப்போல இருக்கிறது. ஆனாலும் இந்த நாட்களில் நான் தேவனுக்கேன்று என்ன செய்யமுடியுமோ அவைகளைச் செய்யவேண்டும். இக்கால வாழ்க்கையில் தேவனுக்கென்று வாழுவாயானால் உன்முடிவு பவுல் சொல்வது போல சமாதானமுள்ளதாயிருக்கும். ‘இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது’ (2தீமோத்தேயு 40:8)