பிப்ரவரி 6               மேய்ப்பர்          சங்கீதம் 23:1-6

“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” (சங்கீதம் 23:1).

      இது ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் மறக்கக் கூடாத ஒன்றாகும். அதே சமயம் நம்முடைய வாழ்க்கையில் சோதனைகள் நெருக்கங்கள் அதிகமாக நேரிடும் பொழுது, ஒருவேளை தேவன் நம்மை மறந்து விட்டாரா என்று நாம் நினைக்கிறோம். ஆனால் தேவன் அவ்வப்பொழுது மேய்ப்பராக இருப்பவர் அல்ல. அவர் எப்பொழுதும் தம்முடைய மக்களை மேய்த்து வழிநடத்துபவராக இருக்கிறார். “மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (ஏசாயா 40:11) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அவர் நம்முடைய முடியாத வேளைகளில் நம்மை மடியிலும் சுமந்து செல்கிறார்.

             நம்முடைய வாழ்க்கையில் நமக்காக இந்த உலகத்தில் மேய்ப்பர்களை ஏற்படுத்திக் கொடுக்கிறார். “நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப் பெருகும். அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 23:3-4). கர்த்தர் மேய்ப்பர்களை ஏற்படுத்துகிறவர் மட்டுமல்ல, அவரும் மேய்ப்பராக நம்மை வழிநடத்துகிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

      விசுவாசம் நம்முடைய வாழ்க்கையில் ஒருக்காலும் தாழ்ச்சியடையக் கூடாது. ஆண்டவரில் உறுதியாக நின்று அவருடைய கிருபையை நாம் எப்பொழுதும் பற்றிக் கொள்ளவேண்டும். நம் வாழ்க்கையில் போராட்டங்கள், பாடுகள் காணப்படலாம். ஆனாலும் தேவன் ஒருபோதும் நம்மைத் தாழ்ச்சியடைய விடமாட்டார்.  அவர் “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” (லூக்கா 12:32) என்று சொல்லுகிறார். நாம் நம்முடைய வாழ்க்கையில் பயந்து கலங்க வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் எல்லா வழிகளிலும் கிருபை உள்ளவராக, நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறவராக இருக்கிறார்.