கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 23         சர்வவல்லவரின் நிழல்      சங்கீதம் 91:1-11

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன்

சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்” (சங்கீதம் 91:1)

    ஒரு கிறிஸ்தவன் எப்போதும் உன்னதமான தேவனின் மறைவைத் தேடவேண்டும். சர்வ வல்லவரின் நிழலில் தங்குவதை அவன் வாஞ்சிக்கவேண்டும். ஏனென்றால் அவன் சந்திக்கும் போராட்டங்கள். எதிராளிகள் அநேகம். தாவீது அதிகம் துன்பத்துக் குள்ளாக்கப்பட்டான். எப்படியாகிலும் தாவீதைக் கொன்று போடவேண்டும் என்று சவுல் பல வழிகளில் முயற்சித்தான். ஏழை தாவீது எப்படியாக தேவனை அண்டி, அவரது நிழலை, பதுகாப்பை வாஞ்சிக்கிறான் பாருங்கள். ‘எனக்கு இரங்கும் தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.’ (சங்கீதம் 57 : 1) ஆம்! உன் துன்ப வேளையில், நீ அவருடைய நிழலில் பாதுகாப்பாய் இருப்பாய். அவர் சர்வ வல்லவர் என்பதை மறவாதே. அவர் தம்முடைய உன்னத ஞானத்தைக் கொண்டு உன்னைப் பாதுகாத்து வழிநடத்த வல்லவராயிருக்கிறார். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் என்று வேதம் சொல்லுகிறது.

     புயலை போன்ற சோதனையில், தேவனை அறியாத மக்களால் வரும் போராட்டங்கள் மத்தியில், அவர் உனக்கு நிழலாய் இருப்பார். ‘கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப் போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.’ (ஏசாயா 25:4) ‘ஏழை  எளியவனுமான என்னை நினைத்தருளும்’ என்று ஜெபி. அவ்விதமான ஜெபத்தை, கர்த்தர் ஒருக்காலும் தள்ளவேமாட்டார். தேவன் தம்முடைய பிள்ளைகளை தமக்குச் சொந்தமானவர்கள் என்று எப்போதும் அணைத்துக்கொள்ளுகிறார். எவ்வளவு பெரிய பாதுகாப்புப் பாருங்கள்! ‘நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.’ (ஏசாயா 51:6) உன்னுடைய வாழ்க்கையின் எந்த வேளையிலும், சூழ்நிலையிலும் தேவனின் மறைவை தேடு. அதுவே மெய்யான அடைக்கலம்.