ஜூன் 24
“ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” (யோவான் 12:26).
நாம் தேவனுக்கு ஊழியம் செய்வது என்றால் என்ன? அவருடைய வழியைப் பின்பற்றி நடப்பதே நாம் முதலாவது அவருக்கு செய்கிற ஊழியமாகும். அவருடைய வழியில் நடக்காத எந்தவொரு மனிதனும் அவருக்கு ஊழியம் செய்கிறவனுமல்ல, அவனுடைய ஊழியத்தை தேவன் அங்கீகரிப்பதுமில்லை. மேலும் அவர் சொல்லுகிறார்: “நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்”. அப்படியானால் கிறிஸ்து எங்கே இருப்பார்? அவர் எப்படி நடக்கிறார்? கிறிஸ்து எப்பொழுதும் பிதாவை சார்ந்து, பிதாவின் சித்தப்படி செய்கிறவராக இருக்கிறார். ஆகவேதான் அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவராக இருக்கிறார். ஆகவே ஒருவன் கிறிஸ்துவோடு ஐக்கியம் கொண்டிருப்பவன் பிதாவோடு வாசம் பண்ணுகிறான். பிதாவுக்கு ஏற்றக் காரியங்களை அவன் செய்கிறவனாகக் காணப்படுகிறான்.
ஆகவேதான் இயேசுகிறிஸ்து தம் வார்த்தையில்: “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” என்று சொல்லுகிறார். இந்த உலகத்தில் கர்த்தரைப் பின்பற்றுகிறவன் என்பவன் யார்? அவருக்காக வாழுவதும், அவருக்காக பணி செய்வதுமே அவனுடைய பிரதான நோக்கமாகக் காணப்படும். அவ்விதமாக வாழும் மனிதனின் வாழ்க்கையை பிதாவானவர் நிச்சயம் கனப்படுத்துவார். அவனை மேன்மைப்படுத்தி, நிலைப்படுத்துவார். அவன் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக மாற்றுவார். “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோ 3:24) என்று பவுல் சொல்லுகிறார். அவரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லுபவன், அரைகுறையான மனதுடன் கர்த்தருடைய காரியங்களைச் செய்யமாட்டான். அவன் எப்பொழுதும் மனப்பூர்வமாய் தன்னை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, எந்தொரு காரியத்தையும் முழுமனதுடன் செய்வான். இவ்விதமான ஊழியம் உன்னில் காணப்படுகிறதா? இதுவே வேதம் போதிக்கும் ஊழியம்.