ஜூன் 5
“நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 6:6)
இனி நாம் பாவத்துக்கு ஊழியம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மனந்திரும்பும் முன்பு வரை நாம் பழைய எஜமானனுக்கு ஊழியம் செய்து வந்தோம். பாவத்திற்கு ஊழியம் செய்து பாவத்தின் வழியாய் நடந்தோம். பாவத்தில் நிலைத்து அதில் நாம் பாவத்தை சந்தோஷமாகப் பருகினோம். இது ஒரு காலத்தில் நடைபெற்ற காரியம். ஆனால் இப்பொழுது நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாகப் பாவத்துக்கு மரித்தவர்களாக காணப்படுகிறோம். உங்களுடைய வாழ்க்கையில் மறுபடியுமாக நீங்கள் பாவத்திற்கு ஊழியம் செய்துகொண்டு இருக்கிறீர்களா? உங்களுடைய வாழ்க்கையில் பாவம் மேற்கொள்ள நீங்கள் சரீரத்தில் இடம் கொடுத்தால், பரிசுத்தத்தை விட்டு அசுத்தத்தை மறுபடியும் நீர் பருக நினைக்கிறீர்கள். ஒரு காலத்தில் கண்களின் இச்சைப்படி நீங்கள் வாழ்ந்தது உண்மைதான். ஆனால் இன்றைக்கு நீங்கள் பாவத்துக்கு நீங்கி விடுதலை பெற்றிருக்கிறீர்கள். “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே” (ரோமர் 6:7). இனி நம் வாழ்க்கை கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கை.
எவ்வாறு நாம் கிறிஸ்துவோடு இணைந்தோம்? நாம் ஒரு பாவி என்று உணர்ந்து, பாவத்திலிருந்து விடுதலை பெற இயேசுகிறிஸ்துவின் பக்கமாகத் திரும்பி, நாம் கிறிஸ்துவோடு இணைந்தோம். அவரை நம் மீட்பராக ரட்சகராகக் கண்டுகொள்ள தேவன் உதவி செய்தார். இவ்விதமாக நீங்கள் மாற்றப்பட்டிருக்கிறீர்களா? உள்ளான இருதயத்தில் மனமாற்றம் இல்லாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பழைய மனுஷன் ஒழிந்து, புதிய மனுஷனாக வெளிப்படுத்தப்பட முடியாது. இயேசுகிறிஸ்து தனக்கு ஆதாயத்தைக் கொடுப்பார் என்று பெருங்கூட்டம் கிளம்பிவிட்டது. வேதத்திற்குப் புறம்பான போதனையினால், இயேசு உனக்கு ஆசீர்வாதத்தை கொடுப்பார் என்று சொல்லி, அநேக போதகர்கள் மக்களின் எண்ணங்களை சிதறடிக்கிறார்கள். ஜனங்களின் பாவத்தைக் குறித்துப் போதிப்பதில்லை. அவர்களின் உண்மையான தேவை பாவத்திலிருந்து விடுதலை என்பதை போதித்து உணர்த்துவதில்லை. ஜனங்களின் அறியாமையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வஞ்சக கள்ளப் போதகன் ஒருநாள் தேவன் கையில் விழுவான், அது பயங்கரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை எவ்விதம் காணப்படுகிறது?