“மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்” (எபேசியர் 6:8).

பொதுவாக இன்றைக்குப் பல விதங்களில் மனுஷர்களுக்கென்று ஊழியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஊழியம் என்பது கர்த்தருக்கே நாம் செய்யும்படியான உன்னதமான பணி. இந்த ஊழியத்தின் உன்னதமானத் தன்மையை அறியாமல் அநேகர், அதைத் தவறாக உபயோகப்படுத்துவது மிக வருத்தமானது. தேவன் நம்மை இந்த மகத்துவமான பணிக்கென்று அழைத்திருப்பார் என்றால், அதை விட மகத்துவமான சிலாக்கியம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இல்லை. ஆகவே நாம் மனிதனுக்கென்று செய்வது பிரயோஜனமில்லை. அது நஷ்டம் என்றும் சொல்லலாம். ஆனால் வேதம் சொல்லுகிறது, கர்த்தருக்கென்றே நல்மனதோடும் நன்றியுள்ள இருதயத்தோடும் தன்னுடைய வாழ்க்கையில் ஆண்டவர் செய்திருக்கின்ற அருமையான கிருபைகளை எண்ணிச் செய்யும்பொழுது அது மிகுந்த ஆசீர்வாதமுள்ள பணி. அது நமக்கு நிறைவைக் கொடுக்கும்படியான பணி. தேவ ஆவியானவர் அவ்விதமானப் பணிகளில் கிரியைச் செய்து ஆத்துமாக்களை இரட்சிக்கிறார். தம்முடைய நாமத்திற்கென்று சாட்சிகளை எழுப்புகிறார். அதன் மூலமாக தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார். ஆனால் மனுஷருக்கென்று ஊழியம் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் அதில் கிரியை செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. கர்த்தருக்கென்று ஊழியம் செய்யும்பொழுது வரப் போகிற நித்தியத்தில் அதற்குரிய பலனைக் கொடுத்து ஆசீர்வதிக்கிறார். ஆகவே நம்முடைய ஊழியத்தைக் கர்த்தருக்கென்று செய்ய இன்னுமாக நாம் அர்ப்பணிப்போடு செய்வோமாக.