“ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்” (யோசுவா 24:14).
கர்த்தரை நாம் எவ்விதம் சேவிக்க வேண்டும் என்பதை யோசுவா தன் கடைசி நாட்களில் இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லுகிறதை பார்க்கிறோம். இன்றைக்கு அநேகர் கர்த்தரைச் சேவிக்கிறோம் என்று சொன்னாலும் அவர்கள் வேதம் போதிக்கும் விதத்தில் சேவிக்க தவறிவிடுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் கர்த்தருக்கேற்ற ஒரு பயம் இருக்க வேண்டும். பயம் என்பது மனிதர்களுக்குப் பயப்படுகிறதைப் போல அல்ல. தேவனுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்ற ஒரு தெய்வ பயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் உத்தமமும் உண்மையுமாய் சேவிக்கிறதற்கு கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் எதிர்பார்க்கிறார். நம்முடைய விருப்பங்கள் செய்கைகள் எல்லாவற்றையும் கர்த்தருடைய சமூகத்தில் ஒப்புவித்து, அவருடைய கிருபைக்காக இரக்கத்திற்காக நாம் கெஞ்சினவர்களாக அவரைச் சேவிக்கிறவர்களாக நாம் காணப்படுவது அவசியம். தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களை நாம் இன்னும் நம்முடைய வாழ்க்கையில் கொண்டிருப்போமானால் அவைகளை நீக்கிவிட வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து, சரிப்படுத்த வேண்டிய காரியங்களைச் சரிப்படுத்துவதும் நீக்கிப்போட வேண்டிய காரியங்களை நீக்கிப் போடுவதும் மிக அவசியம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் பாவத் தன்மையுள்ளவர்கள். ஒரு பாவப்பாட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே நம்மை குறித்து நாம் ஆராய்ந்து பார்ப்பது மிக அவசியம்.