‘பிரசங்கிக்கிறவன்  இல்லாவிட்டால் எப்படி கேள்விபடுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப்பார்கள்? ( ரோமர் 10:14,15)

     இன்றைய சபைகளில் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்குக் கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எஸ்றா தேவனுடைய வார்த்தையை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னபோது மக்கள் மனவருத்தப்பட்டு, மனந்திரும்பினார்கள் என்று பார்க்கிறோம். ஆராதனையில் ஒரு முக்கிய பங்கு பிரசங்கம். இன்றைய ஆராதனைகளில் மற்றெல்லாவற்றிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் பிரசங்கத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை?அநேக போதகர்களே, பிரசங்கத்தின் முக்கியத்துவத்தை அறியாமல் வேதத்தில் ஏதோ ஒரு பகுதியை எடுத்து, கடனுக்காக ஏதாவது சொல்லிவிட்டு கடன் தீர்ந்தது என்றவிதமாய்ப் போகிறார்கள்.

   அநேக சபைகளில் பலவிதமான வாத்திய கருவிகளை உரத்த சத்தமாக இயக்கி, அதோடு பாட்டுகளை பாடுவதிலேயே அநேக நேரம் செலவிடுகிறார்கள். பாடல்கள் பாடக்கூடாது என்று சொல்லவில்லை. சங்கீதங்களினாலும், பாட்டுகளினாலும் கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி ஸ்தோத்தரிப்பது ஆராதனையின் ஒரு பங்கு. ஆனாலும் தேவனுடைய வார்த்தையிலிருந்து மக்களுக்குப் பிரசங்கிப்பது குறைத்து அவ்விதம் செய்யக்கூடாது. அநேக ஆராதனைகளில் சாட்சி சொல்லும் நேரம் என்று வைத்து அதில் நேரத்தை கழிப்பது மற்றொரு காரியம். இன்றைக்கு சபைகளில் மெய்யான பிரசங்கமும் இல்லை, பிரசங்கத்திற்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவமும் இல்லை. அதனால் மக்கள் வேத அறிவில் வளருவதில்லை.

    ஆண்டவராகிய இயேசு தன்னுடைய சீஷர்களை அனுப்பும்போது முதலாவது அவர்கள் செய்யவேண்டிய காரியம் என்ன என்பதைப் பார்க்கிறோம். ’காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு போங்கள். போகையில் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்’ (மத் 10 : 6, 7). அது மாத்திரமல்ல இன்றைக்கு தேவனுடைய வார்த்தையின்படியான பிரசங்கங்கள் பிரசங்கிக்கப்படுவதில்லை. தேவனுடைய வார்த்தையை கேட்கும்படி வாஞ்சி. பிரசங்கங்கள் மூலம் கர்த்தர் பேசுவார்.