மார்ச் 25    

“தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்”

தானியேல் 6:10

      ஒரு கிறிஸ்தவன் தனித்தன்மை வாய்ந்தவன். இந்த உலகத்தின் நிகழ்வுகளினால் அவன் மனம் கலங்கி  தன்னுடைய வாழ்க்கையில்  தேவனை பின்பற்றுவதில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்பவன் அல்ல. ‘தானியேலோவென்றால்’ இந்த உலகத்தை உலகத்தின் நிகழ்வுகளைச் சார்ந்து தன்னுடைய பக்தியை கொண்டிருக்கவில்லை. தரியு முப்பது நாள் வரையிலும் தன்னைத் தவிர வேற எந்த தேவனையானாலும், மனுஷனையானாலும் நோக்கி விண்ணப்பம் பண்ணக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தான். அப்படிச் செய்தால் அவர்கள் அதற்குரிய தண்டனை மிகக் கொடியது என்று அறிவித்திருந்தான். அந்த தண்டனை என்னவென்றால் சிங்க கெபியில் போடப்படுவது. இதனை தானியேல் அறிந்திருந்தும் அவன் வழக்கம் போல் மேலறையில் எருசலேம் நேராகப் பலகணிகளை திறந்து மூன்று வேளையும் ஜெபம்பண்ணினான்.

      நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இந்த உலகத்தில் நாசியில் சுவாசமுள்ள எந்த மனிதனும், சூழ்நிலைகளும் தடையாக இருக்கக் கூடாது. அது ஒருவேளை உறவினர்களாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், பெற்றோர்களாகக்கூட இருக்கலாம். ஆனாலும் கர்த்தருடைய கட்டளைக்கு நாம் முழுமையாக ஒப்புக் கொடுத்து வாழ்வதையே தேவன் எதிர்பார்க்கிறார்.

      தானியேலைப் போன்ற மக்கள் இன்றைக்குத் தேவை. அப்பொழுது தானியேலின் தேவன் யார் என்பதை அந்த ராஜாவும், அந்த மக்களும் அறிந்து கொள்ளும்படியாக தேவன் விளங்கப்பண்ணினார். நாம் ஆராதிக்கிற தேவன் யார் என்பதை பிறருக்கு விளங்கப்பண்ணுவார். நீங்கள் பணித்தளத்தில் அல்லது நீங்கள் இருக்கிற இடத்தில் உங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனாலும் மனம் தளராதேயுங்கள். தானியேலின் தேவனே உன்னோடுகூட இருக்கிறவர். அவருக்காக நீங்கள் வாழுங்கள். மனிதர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். அவர் உங்களை மற்றவர்கள் கண்களுக்கு முன்பாக உயர்த்துவார்.