பிப்ரவரி 17

“இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்”

தானியேல் 4:30

      நேபுகாத்நேச்சார் தன்னுடைய வல்லமையின் பராக்கிரமத்தைக் குறித்து தனக்குள்ளாகவே மெச்சிக் கொண்டான். தான் கட்டின அரண்மனையைப் பார்த்து, ‘நான் கட்டின மகா பாபிலோன்’ என்று சொன்னான். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் நமக்குக் கிருபையாகக் கொடுத்திருக்கும் நன்மைகளை தேவன்  கொடுத்திருக்கிற ஞானத்தைக் கொண்டு செயல்படுத்தும்படி அவர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் ஒருக்காலும் நாம் நம்முடைய ஞானத்தினாலும் அறிவினாலும் இதை செயல்படுத்தினோம், சாதித்தோம் என்று எண்ணுவோமானால்,  இந்த ராஜாவைப் போல நம்முடைய வாழ்க்கையில் தள்ளுண்டு போய்விடுவோம்.

      நாம் ஆண்டவருடைய கிருபையினால் இதைச் செய்திருக்கிறோம் என்ற உள்ளார்ந்த உணர்வோடு நம்மைத்  தாழ்த்துவோமானால், அது ஆண்டவருக்கு மகிமையாய் காணப்படும். “அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று” (தானியேல் 5:20). மேட்டிமையான எண்ணங்களும், சிந்தனைகளும், தன்னைக் குறித்த உயர்வான எண்ணங்களும் வீழ்ச்சியைக் கொண்டுவரும். அது இருதயத்தைக் கடினப்படுத்தி தேவனை விட்டு விலகச் செய்யும். அவ்விதமாக நாம் செய்யும் பொழுது ஆண்டவருடைய மகிமை, கிருபை நம்மை விட்டு அகன்று போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

      ஆண்டவருடைய பிள்ளைகள் எப்பொழுதும் தேவன் தனக்குக் கொடுத்திருக்கிற காரியங்கள் அனைத்தும் கிருபையின் ஈவு என்பதை மனதில் கொண்டு வாழ்கிறவர்கள். அவர்கள் தங்கள் செயலின் மூலம் அவரைக் கனப்படுத்துபவர்கள். ஆகவே நாம் நம்முடைய காரியங்களைச் சிந்தித்து தேவனை மகிமைப்படுத்துவோமாக.