கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 9                       சுயநீதி                          மாற்கு 14:26–36

“அதற்கு பேதுரு : உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும் ,

நான் இடறலடையேன்நான் உம்மோடே மரிக்க வேண்டியிருந்தாலும்

உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்” (மாற்கு 14:29,31)

      என்னால் முடியும், நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன்’ என்று பெருமைப்பாராட்டுகிற கிறிஸ்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இவர்கள் ஆவிக்குரிய மதியீனர்கள். இவர்களில்  பல விதங்கள் உண்டு. இங்கு பேதுருவைப் போல மற்றவர்களை ஒப்பிட்டு, தன்னை உயர்வாய் உயர்த்திக்கொள்வார்கள், பேசுவார்கள். மற்றவர்களைக் காட்டிலும் நான் நல்லவன், நான் மற்றவர்களைப்போல அல்ல என்பார்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டு தேவன் நம்மைப் பார்ப்பதில்லை. நம்மைத் தனித்தனியே பார்க்கிறார். நம்மோடு தனித்தனியாய் செயல்படுகிறார், இடைப்படுகிறார். மற்றவர்களோடு ஒப்பிட்டு உன்னை மேலானவனாக எண்ணிக்கொள்வது ஒரு போதும் உனக்கு பிரயோஜனப்படாது. அது உனக்கு தீமையையே விளைவிக்கும். தவறை உணரக்கூடாதவனாய், உன் இருதயத்தைக் கடினப்படுத்தும். இது பெருமை, மேட்டிமையான சிந்தை. பெருமை, மேட்டிமை தேவனை விட்டு நம்மை விலக்குகிறது.

      ஆண்டவராகிய இயேசு இவ்விதமான மக்களைக் குறித்து அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். (லூக் 18 : 3). இவ்விதமான மக்கள் தேவ நீதிக்குக் கீழ்படியாதவர்கள் (ரோமர் 10:3) மேலும் இவர்கள் தேவ நீதியை அறியாதவர்கள் என்று இவ்வசனத்தில் பார்க்கிறோம்.

     ஒரு  கிறிஸ்தவன் எப்போதும் தன் நீதியை வெறுத்து கிறிஸ்துவின் நீதியையே தேடுகிறவனாய் இருப்பான். அவன் எப்போதும் நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது (ஏசா 64:6). என்று சொல்லக்கூடியவனாகவும், நான் இப்பொழுதோ கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்‘ (கலா 2 : 20) என்றும் சொல்லக்கூடியவனாகவுமே இருப்பான்.