“நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது” 2 நாளா 9:6
சாலமோனைப் பார்க்க வந்த சேபாவின் ராஜஸ்திரி இவ்விதமாய் சொல்வதைப் பார்க்கிறோம். இந்த உலகத்தில் நாம் எண்ணுவதை விட அதிகமான மகிமை பரலோகத்தில் இருக்கிறது. இந்த உலகத்தில் நாம் எண்ணுவதிலும் அதிகமாக ஆண்டவர் நமக்கு செய்பவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண்டவர் நமக்கு அளவில்லாத அளவிலே நன்மை செய்கிறார். “உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” (சங்கீதம் 31:19) என்று வேதம் சொல்லுகிறது. தேவன் தம் பிள்ளைகளுக்காக எல்லையில்லா நன்மையை வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். “எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (2 கொரி 2:9). தேவன் எவ்வளவு மேலான காரியங்களை தம்முடைய பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார். அநேக சமயங்களில் நாம் நம்முடைய வாழ்க்கையில் அதை யோசிக்காமல், இந்த உலகத்தின் காரியங்களை நோக்கியதாகவே இருக்கிறது. ஆனால் தேவன் நமக்கு மேலான நோக்கத்தை வைத்திருக்கிறார் என்பதை நாம் முந்தி அறியவேண்டும். “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2). இந்த உலகத்தில் அவருடைய செயலை அறிந்தவர் ஒருவரும் இல்லை. இந்த உலகத்தில் வாழுகின்ற நாம், பரிசுத்தமான தேவ சாயலாக காணப்படுவோம் என்பது ஒரு பாவிக்கு உன்னதமான செய்தி அல்லவா! அதனுடைய மேன்மையை நாம் உணர்ந்து, வாழ்க்கையில் தேவன் மேல் நம்பிக்கை வைத்து வாழக் கற்றுக் கொள்வோம்.