தேடுகிறவர்களின் பிரச்சனை
– பீட்டர் மாஸ்டர்ஸ்

Seeker’s Problem
– Peter Masters

1. என்னுடைய பாவத்திற்கு நான் போதுமான அளவிற்கு துக்கப்படாததால் என்னால் மனந்திரும்ப முடியவில்லை. பாவத்தை உணர வேண்டிய அளவிற்கு நான் உணரவில்லை.
2.  மனந்திரும்புவதற்கு நான் விரும்புகிறேன். ஆனால் சில சமயங்களில் என் இருதயம் மிகக் கடினமாக உள்ளது.
3. நான் போதுமான அளவிற்கு நல்லவனில்லை என்பதால் கிறிஸ்துவிடம் நான் திரும்ப முடியவில்லை.
4. இரட்சிப்புக்காக நான் தொடர்ந்து ஜெபித்தேன், ஆனால் இதுவரை ஒன்றுமே நிகழவில்லை.
5.  கிறிஸ்தவனாக நான் மாற விரும்புகிறேன். ஆனால், கிறிஸ்தவ வாழ்வு என்பது மிக கடினமானதும், அதிகமானவற்றை இழக்க நேரிடும் என எண்ணுகிறேன்.
6.  நான் அதிகமான பாவதிற்குள்ளாக இருப்பதால், என்னால் மனந்திரும்பி மனமாற்றமடைய முடியவில்லை.
7.  என்னுடைய சந்தேகத்தால் நான் கிறிஸ்துவை கண்டுகொள்ள முடியவில்லை.
8.  வேதாகம ரீதியான இரட்சிப்பு மிக சுலபமாக இருப்பதால் என்னால் சுவிசேஷத்தை நம்ப முடியாமல், கிறிஸ்துவின் பக்கம் திரும்ப முடியாமலுமுள்ளது.
9.  என்னால் மனமாற்றமடைய முடியவில்லை. காரணம், இதற்கு காலம் கடந்து விட்டதுதென்று எண்ணுகிறேன்.
10. என்னுடைய ஜெபங்களுக்கு தேவனால் பதிலளிக்கக்கூடும் என்று நான் எண்ணாததால் நான் மனமாற்றமடையாமல் இருக்கிறேன்.

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” (லூக்கா 11:9).

 கிறிஸ்தவ மனமாற்றத்தை அடைய விரும்புகிறவர்களுக்கும், அவர்கள் சந்திக்கின்ற சில பிரச்சனைகளுக்கும் உதவுவதே இச்சிறு புத்தகத்தின் நோக்கமாகும். ஒருவேளை நீங்களும் மெய்யார்வமுள்ள தேடுகிறவராக இருந்து, இரட்சகராகிய இயேசுவின் பக்கம் மனந்திரும்புவதற்கும், உங்களது இரட்சிப்புக்கு அவர் மீது நம்பிக்கை வைப்பதற்கும், சில பிரச்சனைகள் உங்களுக்கு தடையாக இருக்கலாம். அல்லது ஒருவேளை உங்களது பாவ மன்னிப்புக்காக, புதிய வாழ்க்கை வாழ்வதற்கு ஆண்டவரிடம் ஜெபம் செய்து அதற்கு பதில் கிடைக்காததினால் அதற்கு முயற்சி செய்வதை நிறுத்தியிருக்கலாம்.

1. என்னுடைய பாவத்திற்கு நான் போதுமான அளவிற்கு துக்கப்படாததால் என்னால் மனந்திரும்ப முடியவில்லை. பாவத்தை உணர வேண்டிய அளவிற்கு நான் உணரவில்லை.

 தேடுகிறவர்கள் பொதுவாகவே, அவர்களது பாவ மன்னிப்பிற்காக, அவைகள் செய்த எல்லாப் பாவங்களுக்காக மிக அதிக அளவில் ஆழமான வருத்தம் அல்லது வேதனை அடைய வேண்டுமென்று எண்ணுகிறார்கள். ஆனால், தேவன் இப்படிப்பட்ட வேதனையையோ, மிகவும் உணர்ச்சி வசப்படுகின்ற வருத்தத்தையோ கேட்கவில்லை. தேடுகிறவர்களாக இருக்கின்ற ஒரு சிலர், முதலாவது மனந்திரும்பும் போது, தங்களது பாவத்திற்காக அதிக அளவில் உணர்ந்து, உணர்ச்சி வசப்படுவது உண்மைதான். ஆனால் எல்லாரும் அப்படியல்ல! உண்மையாக மனந்திரும்பியிருக்கிற அநேகர், தங்கள் மனதளவில் பாவத்தை குறித்ததான தெளிவு அடைந்தும், அதன் ஆழமான உணர்வை பிறகு தான் அடைகிறார்கள். நீங்கள் இழந்து போனவர்களென்றும், பாவத்தின் பிடியிலிருக்கிறீர்கள் என்றும், ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டவர்கள் என்று உணர்ந்தீர்களானால், நீங்கள் தேவனிடமாகத் திரும்பி மனந்திரும்ப வேண்டும். தேவனுடைய வார்த்தை இவ்விதமாகக் கூறுகிறது, “அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, எனக்காகப் புலம்பி” (சகரியா 12:10). வேறுவழியில் பார்க்கும்போது, தேடுகிறவர் உண்மையாக மனந்திரும்பி இரட்சகர் மீது நம்பிக்கை வைத்து தன்னுடைய பாவத்திற்காக ஆண்டவர் தாங்க முடியாத வேதனையை சகித்தார் என்று அடிக்கடி தங்கள் வாழ்க்கையிலும் இருதயத்திலும் உணர்ந்து, உணர்வுகள் உணர்வடைந்து, அவமானத்தில் அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர் செய்து முடித்த காரியத்திற்காக கிறிஸ்துவுக்கு அவர்கள் நன்றி கூறுவார்கள்.

   சில சமயத்தில் மக்கள் நீண்ட காலத்திற்கும் பிறகு ஆண்டவரிடம் வருவார்கள். ஒருவேளை, தயங்கி பின் நோக்கிச் சென்றோ இருக்கலாம். காரணம் உலகத்தோடுள்ள அவர்களது பிணைப்பு, இவர்கள் உண்மையாகவே மனந்திரும்ப விரும்புகின்ற தருணத்தில் இவர்களுடைய உணர்வுகள் முழுவதும் ஊக்கமிழந்து (அவமானமே) அவைகளின் காரணங்களில் ஒன்றாக இருக்கின்ற விளைவாய் இருக்கலாம். இப்படி ஒருவேளை உங்களில் ஏற்பட்டால், உங்கள் மனதளவிலாவது நீங்கள் மனந்திரும்பி, நீங்கள் கிறிஸ்துவிடம் வரும்போது உங்களது உணர்வுகள் ஆழமாக பொங்கி ஆண்டவருக்கு நான் கடனாளியென்று அவருக்கு நன்றி செலுத்த முடியும்.

மனந்திரும்புவதற்கான  வழிமுறைகள்:

   நீங்கள் மனம் திரும்பும்போது சரியான மனப்பக்குவம் உடையவராக இருகிறீர்களா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் மனந்திரும்புவதற்கான வேதத்திலுள்ள சில உதாரணங்கள்.

அ. மனந்திரும்புதல் என்பது உறுதியற்ற அல்லது பொதுவான அடிப்படையில் வரக்கூடாது. ஆனால் உங்களது முதன்மையான பாவங்களை தேவனுக்கு முன்பாக நீங்கள் அறிக்கையிட வேண்டும்.

ஆ. உன்னை, நீயே தேவனுக்கு முன்பாக அடங்காதவனென்றும், பாவத்தின் காரணமாக வழிவிலகிப் போனவனென்றும், தேவனின் அளவின்படி வாழுகிறவனாக இல்லாமல், அடிக்கடி விழுகிறவன் என்றும் உணர வேண்டும்.

இ. உன்னுடைய இருதயத்தில் உள்ள பாவத்திலிருந்தும், நீ செய்த பாவத்திலிருந்தும் மனந்திரும்ப வேண்டும். அவைகள் பெருமை, சுயநலம், தன்னலம், இச்சிக்கிற விருப்பம், அருவருப்பான பகை எண்ணங்கொண்ட மனப்பான்மை மற்றும் அநேக பாவங்கள் இருதயத்திலே ஆழமாய் பதிந்திருக்கின்றன.

ஈ. நீ பெருமை கொள்கிற எந்தவொரு நல்ல காரியங்களும், தேவனுடைய பார்வையில் அளவிடும்போது அது தீமையானதாகவும், பாவத்தால் கறைபடுத்தப்பட்டதாகவும் உள்ளது என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

உ. தேவனுடைய ஆசீர்வாதம் என் வாழ்க்கையில் தேவை என்பதன் அடிப்படையில் உன் பாவமன்னிப்பிற்காக மனந்திரும்பாமல், ஒருவேளை இதற்காகவும் மனந்திரும்பினாலும், இது குறிக்கோளாக இல்லாமல், உண்மையான மனமாற்றம் தேவையென்றும் கட்டாயம் உணர வேண்டும்.

ஊ. தேவனுக்கு முன்பாக பாவமன்னிப்பை பெரும்போது, தாவீது ராஜாவை போல தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன் என்று அறிக்கையிட வேண்டும். சில நேரங்களில் ஜனங்கள் தங்களுடைய பாவங்களை பிறர் அறிவதினால் பெரும் திகைப்புக்கு உள்ளாகிறார்கள். நாம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து விட்டோம் என்பதே நம்முடைய வருத்தமாய் இருக்க வேண்டும்.

எ. உன்னை நீயே உன் ஆளுகையிலிருந்து விடுபட்டு, உன் ஆண்டவராகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு உன் வாழ்க்கையை முழுமையாக ஒப்புக்கொடுத்து, அவரின் எல்லா காரியத்திற்கும் கீழ்ப்படிய உன்னை அர்ப்பணிக்க வேண்டும்.

 உங்களுடைய உணர்வுகள் இன்னும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்த போதும் உண்மையான மனந்திரும்புதல் மேற்கூறின எல்லாவற்றையும் முழுமனதுடன் தேவனுக்கு முன்பாக வெளிப்படுத்தக் கூடும். நீங்கள் மனந்திரும்புவதற்கு முன்பாக பாவத்திற்காக மிகப் பெரிய அளவில் அதன் துக்கத்தை உணர காத்துக் கொண்டிருந்தால், நித்தியத்திற்குமாக நீங்கள் காத்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஏனெனில், தேடுகிறவர்களில் அநேகர் ஆழமான உணர்வை மனந்திரும்புதலை பெற்றபிறகு தான் அடைகிறார்களே தவிர, அதற்கு முன்பதாக அல்ல. தேவன் மூலமாக பெறப்பட்ட பாவத்திற்கான எச்சரிப்பைப் பெற்றவுடன் அதற்கு நீ மனந்திரும்ப செயல்பட வேண்டும். காரணம் பாவத்திற்காக நீ அதிக அளவில் மனக்கசப்பு அடைய வேண்டும் என தேவன் கேட்கவில்லை. மாறாக, பாவத்திற்கான அறிவிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்றே அவர் எதிர்பார்க்கிறார்.

 ஆகவே, பாவத்திற்கான அதிக உணர்வை இன்னும் பெறவில்லை என்ற சாக்குபோக்கு கூறி, மனந்திரும்புவதற்கு தாமதப்படுத்தாதே. உன்னில் இருக்கின்ற உணர்வோடு தேவனிடம் சென்று உன்னுடைய பாவத்தையும் நம்பிக்கையின்மையையும் அறிக்கையிட்டு, மனந்திரும்பி நீ செய்த ஒவ்வொரு செயலுக்காகவும் உன்னைப் பற்றி விழிப்புணர்வு அடைய கடவுளிடம் கேள்.

2. மனந்திரும்புவதற்கு நான் விரும்புகிறேன். ஆனால் என் உணர்வுகள் பாவத்தைக் குறித்து தேவையான அளவிற்கு வருத்தமடையவில்லை என்பது பிரச்சனையல்ல. சில சமயங்களில் என் இருதயம் மிகவும் கடினமாக உள்ளது.

   மேற்கண்ட வாக்கியம் நீங்கள் ஏன் மனந்திரும்ப வேண்டும் என்பதற்கு சரியான காரணமாக உள்ளது. மற்ற தவறான மனநிலையோடு கூட தேவனுக்கு முன்பாக உங்கள் கடின இருதயம் என்கிற பாவத்தோடும், அடங்காத தன்மையோடும் உள்ளது. உங்கள் இருதயம் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்நிலையில் அவர் இதற்கு பொறுப்பாளியாக உள்ளான் (எபிரெயர் 3:12). ஒருவேளை உங்கள் இருதயம் மென்மையாக, பிடிவாதமில்லாததாக அல்லது தன்னலமற்றதாக இருந்தால் நீங்கள் மனந்திரும்ப அவசியமில்லை. இருந்தபோதும், உங்கள் இருதயம் கடினமாகவும், காலகாலமாக தேவனுக்கு எதிராகவே செயல்படுகிறது.

   தேடுகிறவராக இருக்கிற நீங்கள், ஒரு குறிபிட்ட அளவிற்கு இரு தன்மையுடன் செயல்படுகிறீர்கள். காரணம் தேவ ஆவியானவர் உங்கள் இருதயங்களில் செயல்படும்போது அச்சமயம் மனந்திரும்ப விரும்புகிறீர்கள். ஆனால் ஒன்னொரு தன்மையில் தொடர்ந்து நீங்கள் உணர்வற்ற, முரண்டு பிடிக்கிறவர்களாக பிடிவாதமாக உள்ளீர்கள். இத்தன்மை இயேசு கதரேனருடைய நாட்டின் கடலருகே வந்துபோது பிசாசு பிடித்திருந்த மனிதன் ஓடி, முழங்காற்படியிட்டு அவரை சந்திக்க சென்ற சம்பவம் எடுத்துக்காட்டாக அமைகிறது. அவர் ஒரு பக்கம் உதவி கேட்கிறான். மற்றொரு பக்கம் கிறிஸ்துவை விட்டு விலகப் பார்க்கிறான். அவருடைய உதவிக்காக அவருடைய பாதத்தில்  அமர்ந்து தனக்காக கெஞ்சுகிறான். அதே நேரம் உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும், உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்கிறேன் என்று அவன் கூறுவதை பார்க்கிறோம். இச்சம்பவத்தில் பிசாசு பிடித்திருந்தவனிடம் பிரிவினை மனப்போக்கு காணப்பட்ட போதிலும், தேவன் அவனை சுகமாக்கி, இரட்சித்தார்.

   உங்கள் உள்ளத்திற்குள் ஒரு போராட்டம் இருக்கிறது. சில சமயங்களில் நீங்கள் தேவனுக்காக விருப்பமற்றவராக இருப்பது போல் எண்ணுகிறீர்கள். அதனால் தானே நீங்கள் தேவனுடைய இரக்கத்திற்காக ஓடி, உங்களை அவரிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும். மனமாற்றத்துடன் வரக்கூடிய இருதய மாற்றத்திற்காக நீங்கள் ஏங்கி, உடனடியாக மனந்திரும்ப வேண்டும். ஒருவேளை இதற்கு உங்கள் இருதயம் நாட்டம் கொள்வதற்கு கடினமானதாகவும், சிந்தனை செய்யாமலும் இருக்கலாம். காரணம் நாம் மனந்திரும்பும் வரை நாம் எல்லாருமே தேவனுக்கு முன்பாக இம்மனப்போக்குடன்தான் இருக்கிறோம். தேவனுடைய வாக்குத்தத்தத்தை கவனியுங்கள். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.” (எசேக்கியேல் 36:26-27). இவை நாம் மனந்திரும்பிய பிறகு நம்முடைய இருதயத்திற்குள் முழுவதுமாக புகுத்தப்படுகிறது.

3. நான் இன்னும் கிறிஸ்துவிடம் திரும்ப முடியவில்லை. காரணம் நான் போதுமான அளவிற்கு நல்லவனல்ல. முதலாவது நான் நல்லவனாக மாறுகிறேன். பிறகு அவரிடம் சென்று மனந்திரும்புகிறேன்.

   ஒரு நபர் தனது வழிகளை மாற்றிக் கொள்ளமுடியுமா? அவரது இருதயத்தை தானே சுத்தப்படுத்த முடியுமா? எரேமியா இதற்கு பதிலளிக்கும்போது எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக் கூடுமா? இல்லை என்பதுதான் வெளிப்படையான பதில். அப்படியென்றால் மக்கள் தங்கள் பாவகரமான வாழ்க்கையிலிருந்து விடுபடவும், தேவனுடைய ராஜ்யத்திற்குள்  நுழைய முடியாதவர்களாகவும் உள்ளார்கள்.  உங்களுடைய இரட்சிப்புக்கு நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். உங்களது பாவத்தின் கடன் பெரிதளவில் இருப்பதால் எவ்வளவேனும் அதை செலுத்த முடியாது. தேவன் எதிர்பார்க்கும் அளவை விட நீங்கள் வெகுதொலைவில் இருப்பதால், அதை சரி செய்ய வாழ்நாள் முழுவதும் போதாது என்பதே உங்களுடைய தன்மையாகும். நீங்களாகவே உங்கள் உள்ளத்தில் இருக்கிற பாவமான பெருமை, இச்சை, பொய், தன்னல அன்பு, பொறாமை மற்றும் பகைமை இவைகளிலிருந்து விடுபடவே முடியாது.

   தேவன் மட்டுமே உங்கள் ஆத்துமாவை இரட்சித்து, அவர் மட்டுமே எல்லாவற்றையும் உங்களில் செய்ய முடியும். அவரது மரணத்தினால் மட்டுமே உங்கள் பாவம் கழுவப்பட்டு, அவை விலகி ஓட முடியும். அவருடைய வல்லமை மட்டுமே உங்கள் ஆத்துமாவிற்கு ஆவிக்குரிய வாழ்க்கையை கொடுத்து, புதிய தன்மையைக் கொடுக்கும். உங்கள் மனமாற்றம் இப்படிப்பட்ட அஸ்திபாரத்திலே தங்கியிருக்க வேண்டும். அதாவது எல்லாவற்றையும் செய்ய தேவன் மீது நம்பிக்கை வைத்து ஒன்றுமே செலுத்த இயலாத ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டவனென்று உணர வேண்டும். கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பாக நீங்கள் நல்லவனாக மாறி விடலாம் என்று எண்ணினால், நீங்கள் உங்கள் இலக்கை இழந்து விட்டீர்கள். கிறிஸ்துவின் வார்த்தையை நினைத்துப்பாருங்கள். பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல், சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை . . . நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். (மத்தேயு 9:12-13).

4. என்னுடைய இரட்சிப்புக்காக தொடர்ந்து ஜெபித்திருக்கிறேன். ஆனால் இதுவரை அதற்கான காரியங்கள் ஒன்றுமே ஏற்படவில்லை.

  நீங்கள் உண்மையான மனந்திரும்புதலின் ஜெபம் செய்து ஆண்டவர், உங்களை ஏற்றுக்கொண்டார் என்ற சாத்திய கூறு இருக்கிறதா என்று முதலில் சிந்திக்க வேண்டும். ஒருவேளை மனமாற்றத்தின்போது வருகிற அனுபவத்தைக் காட்டிலும் வித்தியாசமான அனுபவத்தை நீங்கள் எதிர்ப்பார்த்திருப்பதால் இதைக் குறித்து உணராமல் இருந்திருக்கலாம். பிரசங்கிகள் மற்றும் இதர கிறிஸ்தவர்கள் தேவனைப் பற்றி அறிதலை தேடுகிறவர்களிடம் கூறும்போது அவர்கள் வித்தியாசமான ஆச்சரியமான காரியங்கள் மனமாற்றதின்போது  நடக்கும் என கற்பனை செய்கிறார்கள். புதியதாக இரட்சிக்கப்பட்டவர்களை கிறிஸ்துவுக்குள் குழந்தை என்று வேதம் கூறுவது உண்மையே. ஒரு குழந்தை தனது தாயின் அன்பான உயர்வான தோற்றம், கவனிப்பு போன்றவைகளை பார்த்து, அக்குழந்தை மெச்சிக் கொள்ளாது. மற்றும் தாயினுடைய அறிவுப் பூர்வமான வார்த்தைகளைக்கூட அக்குழந்தையால் பாராட்ட முடியாது. தாம் செய்கின்ற சில செயல்களை வைத்து, உதாரணமாக பாலூட்டுவதன் மூலம் அரவணைப்பு, கொஞ்சிப் பேசுதல் போன்றவைகளின் மூலம் குழந்தை யோசிக்கவும், உணரவும் செய்கிறது. அதுபோல தான் கிறிஸ்துவுக்குள் வளருகிற குழந்தைகளும்.

   மனந்திரும்பும்போது முதலாவது தேவன் செய்து முடித்த காரியம் என்ன என்று நீங்கள் அறிய முடியும். புதிய இருதயத்தையும் புதிய மனப்பக்குவத்தையும் அடைந்து, பாவத்தை மேற்கொள்ள புதிய வல்லமையையும் பெற்றுக் கொள்வீர்கள். தேவனுடைய காரியங்களைப் பற்றி புரிந்து கொள்ளுதல், ஜெபம் செய்யக்கூடிய ஆவல், வேதத்தை படிக்கவும், சக விசுவாசிகளோடு ஐக்கியம் கொள்ளவும் இரட்சகரை பிரியப்படுத்தவும் நேரிடும், உங்களுடைய மனசாட்சி பாவத்தைக் குறித்து அதிக உணர்வையும், உலக பிரகாரமான சந்தோஷங்கள் உங்களை நெருங்காமலும் இருக்கும். பிசாசு உன்னுடைய விசுவாசம், நம்பிக்கை நீ தேவனுடைய பிள்ளை போன்றவைகளைக் குறித்து சதேகத்தை உண்டாக்குவான். தேவன் ஒருதரம் தமக்கென்று உன்னை மீட்டுக்கொண்டால் ஆத்துமாவின் எதிரியானவனுடன் போர் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

   தேவன் உன்னை ஏற்றுக் கொண்டதற்கு இக்காரியங்கள் நிரூபனமாகும். ஆகவே தேவனுக்கு உன் இருதயப் பூர்வமான நன்றி செலுத்தி, அவரை போற்றுங்கள். கிறிஸ்துவுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை கொடுக்க தவறாதீர்கள். ஒருவேளை தேவனுடைய மனமாற்ற செயலின் இந்த ஆதரங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தால், நீங்கள் செய்ய வேண்டிய வேலை அவரில் விசுவாசம் வைத்து செயல்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய சிந்தனைகளை சிந்தியாமல், நான் கிறிஸ்துவுக்குகுட்பட்டவன் என்று சாத்தானிடம் கூறி அவனுடைய சதி ஆலோசனைக்கு உங்கள் மனக்கதவை அடைக்க வேண்டும். இப்படியாக நீ கிறிஸ்தவ வாழ்வில் வளரும்போது இரட்சகரைப் பற்றி அதிகமாக அறிந்து திட நம்பிக்கையை பெற்று, அவர் உன்னுடையவரென்றும், நீ அவருடையவனென்றும் கூற முடியும்.

   உன்னுடைய இரட்சிப்புகாக நீ ஜெபம் செய்தபோது எதை எதிர்பார்த்து ஜெபம் செய்தாய்? பிரகாசிக்கிற ஒளியா அல்லது மெல்லிய சத்தமா? ஒருவேளை இப்படிப்பட்ட தவறான காரியத்தை எதிர்ப்பார்த்து உண்மையானதை இழக்கலாம். இருந்தபோதும், தேடுகின்ற உன்னுடைய ஜெபத்திற்கு உண்மையாக பதில் கிடைக்கும். திரும்பவும் உறுதியாகச் சென்றால், உங்கள் முழு இருதயத்தோடும் ஆண்டவரைத் தேடினால் அவரைக் கண்டடைவீர்கள்.    

   ஒருவேளை உங்களுடைய விட முடியாத பாவம் சில சுயநலம், பெருமையான எதிர்பார்ப்பு, தவறான தொடர்புகள் போன்ற காரணங்களினால் உங்கள் இரட்சிப்பிற்கான ஜெபத்திற்கு பதில் கிடைகாமல் இருந்திருக்கலாம். அல்லது நீ உன்னை இன்னும் நல்லவன் என்று எண்ணி கிறிஸ்துவின் கல்வாரி மட்டுமே இரக்கத்தையும் அன்பையும் தர முடியும் என்று உணராமலும் இருக்கலாம். நீங்கள் முழு இருதயத்தோடும், தவறான வழிமுறையில் செல்லாமல், உண்மையாக தேடினால், அவர் உன்னை ஆசீர்வதிப்பார். ஆனால், நீ தேவனை மட்டும் நம்ப வேண்டும். தன் வியாதிக்காக மருந்து எடுத்துக் கொண்டு, பிறகு பயத்தின் காரணமாக உடலின் வெப்பநிலை, நாடி துடிப்பு சரிவர இயங்கவில்லை என்றும், மருந்து சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூறுகிற நபர்போல இருக்கக் கூடாது. தேவனை நம்பு! யாரெல்லாம் உண்மையாக அவரிடத்தில் வருகிறார்களோ கிறிஸ்து அவர்களை ஏற்றுக் கொள்வார் என்றும், அவரில் முழுமையான வல்லமை உண்டு என்றும் வாக்கு பண்ணியுள்ளார். நீங்கள் உண்மையாக நம்பி அவரிடம் வந்தால் எப்படி அவர் புறக்கணிப்பார்? என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று அவரே கூறியிருக்கிறார் (யோவான் 6:37).

5. நான் கிறிஸ்தவனாக மாற விரும்புகிறேன். ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மிகவும் கடினம் என்று எண்ணுகிறேன். இதற்காக நான் நிறைய காரியங்களை இழக்கவும் துன்பப்படவும் இகழப்படவும் நண்பர்களை இழந்து மகிழ்ச்சியற்றவனாயிருக்கவும் கூடும் என எண்ணுகிறேன்.

   நீங்கள் தேடுகிறவராக இருந்து, மேற்கண்டவாறு நினைத்தால், மனமாற்றம் எப்படியும் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்பதை கொஞ்சம் குறைய உணருகிறீர்கள். கிறிஸ்தவனாவது என்பது பழைய காரியங்கள்  அழிந்து, எல்லாம் புதிய காரியங்கள் மாறுவது தானே! (2 கொரிந்தியர் 5:17). கிறிஸ்தவ வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய மாற்றம் என்பதை அறிவது முக்கியமாகும். ஆண்டவராகிய இயேசு தமது வார்த்தையில் இவ்விதமாகக் கூறுகிறார். “தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்கு பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்கமாட்டான்” (லூக்கா 14:27-28). எப்படியிருந்தாலும், கிறிஸ்தவ வாழ்வு என்பது மாற்றத்தையும், இழப்பையும் உண்டாக்கக் கூடும் என்பது உண்மையே. இதனால் அடையப்போகும் ஆசீர்வாதம் இவைகளைவிடப் பெரியது. நித்தியத்திற்கும் உள்ளதாகும்.

   உதாரணத்திற்கு ஒருவேளை நீங்கள் மகிழ்ச்சியற்ற நபர் என்று வைத்து கொள்வோம். நீங்கள் மனமாற்றமடையும் வரை சிறப்பான மகிழ்ச்சியை உங்கள் வாழ்வில் ஒருபோதும்கூட ருசிப்பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களுடைய வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கும்போது நீங்கள் அதன் அனுபவத்தையும் அதன் ஆசீர்வாதத்தையும் பெற்றிருப்பீர்கள். இரட்சிக்கப்படாதவனுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது.

   இரட்சிக்கப்பட்ட விசுவாசியாக நீங்கள் தேவனருளிய மன்னிப்பு, மன அமைதி, புதிய தன்மையுடன் முன்பைவிட இப்போது உங்களில் சிறப்பான ஒருவர் இருப்பதை அறிய முடியும். கூடவே ஆவிக்குரிய வாழ்வை பெற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு புதிய மற்றும் விடுதலைப் பெற்ற மனதோடு வாழ்வைப் பற்றியும், தேவனுடைய வார்த்தையைப் பற்றியும் ஆழமான புரிந்து கொள்ளுதலைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்தோடுகூட கிறிஸ்துவே உனது இரட்சகர் என்ற நிச்சயத்தையும், முன்பு அடைந்திராத ஒரு நிறைவும் சந்தோஷத்தையும் பெற்று பரலோகம், நித்திய வாழ்வு இப்போது என்னுடையது என்ற உளப்பூர்வமான உறுதியைப் பெற முடியும்.

   இதனிமித்தமாக சில நண்பர்களை இழந்திருக்கலாம். ஆனால் இப்போது நிறைய ஆவிக்குரிய கிறிஸ்தவர்களோடு தொடர்பு வைத்து, அவர்களுடன் அன்புடனும், பாசத்துடனும் பழகுவீர்கள். இதற்கு முன்பதாக ஒரு போதும் இதுபோன்ற அனுபவம் உனக்கு கிடைத்திருக்காது. தேவனுடைய வாக்குத்தத்தம் நீங்கள் எதையாவது இழந்தால், “இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 18:30).

   பல ஆசீர்வாதங்களை பெறுவதற்காக மாத்திரம் உங்களுடைய வாழ்க்கை கிறிஸ்துவிடம் செல்ல வேண்டும் என்று கூறவில்லை. காரணம் இரட்சிப்புக்காக நீங்கள் ஏறெடுத்த ஜெபம் ஆசீர்வாதத்தை மட்டுமே உள்நோக்கியிருந்தால், தேவனால் அதற்கு பதில் கொடாமல் போயிருக்கலாம். இந்த பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கிறிஸ்துவிடம் எல்லாவற்றையும் கடந்த வல்லமையும், சகோதரனையும் பார்க்கிலும் அதிக சொந்தமாய் சிநேகிக்கிற நண்பனும் உண்டு என்று நிரூபித்திருக்கிறார்கள். நீங்கள் அடிப்படையற்றவராகவும், தகுதியில்லாதவராகவும் இருக்கிறீர்கள் என்ற பய உணர்வு இருந்தால், நீங்கள் தாமதம் செய்யாமல் கிறிஸ்துவிடம் வருவீர்களாக. தாவீது இவ்வாறு கூறுகிறார், “இந்த ஏழைக் கூப்பிட்டான். கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்கீதம் 34:6, 8).

6. நான் மிகவும் மோசமானவனாயிருப்பதால் என்னால் மனந்திரும்பவோ, மற்றும் மனமாற்றமடையவோ முடியவில்லை. நான் அதிக அளவிலான பாவத்தோடு காணப்படுகிறேன்.

 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மகன் மனாசே (கி.மு 696-642). மிகச்சிறந்த குடும்ப பின்னணியில் சிறியவனாயிருக்கும்போது ஏசாயாவின் செய்தியை கேட்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. இருந்தபோதும் அவன் மிக கொடூரமாக, யூதாவின் ஆட்சியில் மிக மோசமான ராஜாவாக அவன் இருந்தான். அவன் எருசலேமை நாலுமூலைவரையும் இரத்தபழிகளால் நிரப்பத்தக்கதாய்  என்று அவனைக் குறித்து வேதம் கூறுகிறது (2 ராஜாக்கள் 21:16)

   ஆனால், தேவன் அவனை சிறைவாசத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். தேவன் இவனது ஜெபத்தையும்கூட கேட்டு பதிலளித்தார் என்று படிக்கிறோம் (2 நாளாகமம் 33:12-13).

   ஏசாயாவின் வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள். “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல, வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சை போலாகும்” (ஏசாயா 1:18). தேடுகிறவர்கள் எப்போதும் சந்தேகப்படுகிறவர்களாகவும் தேவனைப் பற்றி புரியாதவர்களாகவும் இருப்பார்கள்.  

7. ஆயுதந்தரித்த பலவான் தன் அரண்மனையைக் காக்கும்போது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். நாம் கிறிஸ்துவின் வல்லமைக்குள் இருக்கும்போது பிசாசானவன் நம்மை சந்தேகத்தினால் துன்புறுத்தமாட்டான். ஆனால் இதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளிவருகிறோமா, அவன் நம் மனதில் சந்தேகத்தை எழுப்பி, போர் செய்ய தூண்டுகிறான்.

   நாம் விசுவாசத்திற்குள் போகாதபடிக்கு எதிரியான பிசாசானவன் நமது ஆத்துமாவுக்குள் சந்தேகத்தை உண்டாக்குவான். ஆனால், இவைகள் மனந்திரும்புதலுக்கு ஏதுவான நமது ஜெபத்தை கேட்பதிலிருந்து கர்த்தரை தடை செய்யாது.

   என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்று ஜெபம் செய்த மனிதனைப்போல ஜெபிக்க வேண்டும் (மாற்கு 9: 24). அவன் தனது பலவீனமான விசுவாசத்திற்காக ஜெபித்தான். கர்த்தர் அவனுக்கு வல்லமையான முறையில் பதிலளித்தார்.

   தேவனிடம் சென்றடைய வேதத்தை பெரியளவில் புரிந்திருக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை! வேதம் நன்றாக புரிகிற வரைக்கும் எனது மனந்திரும்புதல் மற்றும் இரட்சிப்பிற்கான ஜெபத்தை தாமதப்படுத்துவேன் என்பது ஒழுங்கு முறையை தலைகீழாக்கி விடுதலுக்குச் சமம். 1 கொரிந்தியர் 2:14 இல் இப்படியாக வாசிக்கிறோம். “ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான். அவைகள் அவனுக்கு பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்”. சுவிசேஷ செய்தி மூலம் பரிசுத்த ஆவியானவர் இருதயத்தை தொடும்போது நமக்கு தெளிவாகப் புரியும். ஆனால் அது இரட்சிப்படையயும்வரை இல்லாமல் அடைந்த பிறகும் வேதத்தை புரிந்து கொள்ள நமது மனக்கண்களை கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்கிறார். முதலாவது செய்ய வேண்டியது என்னவென்றால், தேவன் பக்கம் மனந்திரும்பி இரட்சிப்பைத் தேடி, அவர்மீது நம்பிக்கை வைக்க தேவனுடைய வார்த்தையை புரிந்து கொள்ள உனக்கு கிருபை கிடைக்கும்.

   எந்த ஒரு மாணவனும் தனது கல்லூரி பாடம் முழுவதும் தெரியவில்லை என்பதற்காக தாம் போட்ட விண்ணப்பத்தை திரும்ப பெறமாட்டான். அதுபோல தேடுகிறவர்கள் கூட மனமாற்றமடைந்த பிறகும் தேவனுடைய சத்தியங்களை புரிந்திருப்பார்கள் என்று கூற முடியாது. ஏற்கனவே பரிசுத்த ஆவியானவர் தமது சுவிசேஷ செய்தி மூலம் தெளிவுப்படுத்தி கூறினதை ஏற்று, அதன்படி செய்ய கவனமாயிரு, பிறகு வேதத்தைப் புரிந்து கொள்வதற்கு பரிசுத்த ஆவியாகிய தேவன் உதவி செய்வார். முதலாவது செய்ய வேண்டியதை முதலாவது செய்ய வேண்டும். கிறிஸ்துவின் பாவப் பிராயச்சித்த பலியை உணர்ந்து, மனந்திரும்புதலைப் பற்றியும், மனமாற்றத்தையும் பற்றியும் அறிந்து, அதை நடைமுறைப்படுத்தி கிருபையாக தேவன் உன் வாழ்க்கையை மாற்றி அவரோடு கூட பயணம் செய்ய, வேதத்தை அதிகளவில் புரிந்து கொள்ள உதவி செய்வார்.

8. வேதாகமத்தின்படி வருகிறதான இரட்சிப்பு மிகவும் சுலபமாக இருப்பதால் என்னால் சுவிசேஷத்தை நம்ப முடியாமல், கிறிஸ்துவின் பக்கம் திரும்ப முடியாமல் இருக்கிறது. தேவனோடு ஒப்புரவாகிறதற்கு பெரிய காரியங்கள் ஏதாவது செய்ய வேண்டுமா?

   கிறிஸ்துவின் இரட்சிப்பு என்பது நாம் புரிந்து கொள்வதை விட மிகவும் கடினமானது என்பதே உண்மை, நமக்கு ஒருவேளை இது சுலபமாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்துவுக்கு இது சொல்லி முடியாத அளவுக்கு கடினமாகும். இரட்சிப்பின் அதிக மேன்மையை உணர்ந்த பவுல், எபேசு சபைக்கு இவ்விதமாக கூறுவதைக் கவனியுங்கள். “நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்காற்படியிட்டு விசுவாசத்தினால் கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும்… கிறிஸ்துவின் அன்பின் அகலமும், நீளமும், ஆழமும் உயரமும் இன்னதென்று உணர்ந்து அறிவுக்கெட்டாத அந்த அன்பை உணர்ந்து கொள்ளவும்…” (எபேசியர் 3:14-19). 

   இந்த உலகத்தில் மிக அற்புதமானது இரட்சிப்பு மட்டுமே. அதை சர்வ வல்லமையுள்ள கிறிஸ்துவால் மட்டுமே நமக்குத் தர முடியும். ஒரு பாவமும் செய்யாத, பூரணமான இயேசு கிறிஸ்து தமது ஆத்துமாவிலே நம்முடைய குற்றத்தையும், பாவத்தின் தண்டனையையும் ஏற்று, சிலுவையிலே சில மணி நேரங்கள் நசுக்கப்பட்டு, வேதனைப்பட்டு, மனிதன் புரிந்து கொள்ள முடியாத கஷ்டங்களைப்பட்டார். கைகளிலும், கால்களிலும் குத்தப்பட்ட ஆணி, சிலுவையிலே மரண வேதனையோடு தொங்கின இவைகளெல்லாம் சில நிமிடங்கள் பிதாவோடு பிரிக்கப்படும் கண்ணுக்குப் புலப்படாத தண்டனையோடு நிச்சயமாக ஒப்பிடமுடியாது. காரணம் நமது நகர நித்திய தண்டனையை அவர் ஏற்றதால்.

   இரட்சிப்பு நமக்கு எளிமையானதாகத்தான் இருக்கும். இல்லையென்றால் ஒருபோதும் நாம் இரட்சிக்கப்பட முடியாது. ஒருவேளை இதை பெற அதிக ஞானமும், அல்லது மற்ற குணநலன்கள் தேவையாயிருப்பின் தேவனை மகிமைப்படுத்தும்படி ஒருவருமே அந்த குணாதிசயங்களைக் கொண்டிருக்க முடியாது. மேலும் இதை அடைய நமது நீதியை எதிர்பார்த்தாலும், நித்திய தண்டனையிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாதவாறு உள்ளது. காரணம் வேதம் கூறுகிறது “அந்தப்படி நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10). 

ஒரு வகையில் இரட்சிப்பு என்பது எளிமையானது தான்; ஆனால் தேவனுடைய பார்வையில் நம்முடைய எல்லா குற்றத்திற்காகவும், பரிசுத்த தேவன் துன்பப்பட்டு, குற்றமில்லாதவர் சிலுவையிலே தொங்கினது நம்முடைய எண்ணத்திற்கு மிகவும் ஆச்சரியமானதாகும். இதை ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது.

இரட்சிப்பு எளிமையானது என்று அதை ஒருபோதும் பெற மறுக்காதே. காரணம், இதற்காக இரட்சகர் இயேசு பெரும் விலைக்கிரயம் கொடுத்துள்ளார். இதை நாம் நித்தியத்திற்கு செல்லும் வரை புரிந்து கொள்ள முடியாது. “எந்த மனுஷனும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசியர் 2:9). அறிவீனத்தையும், பெருமையையும் விட்டு விட்டு பாவமன்னிப்பைப் பெற தேவனிடம் மனத்தாழ்மையோடு வந்து அவரது இரக்கத்திற்காகவும், நித்திய வாழ்விற்காகவும் கெஞ்சுங்கள்.

9. என்னால் மனமாற்றமடைய முடியவில்லை. காரணம், இதற்கு காலம் கடந்து விட்டது என எண்ணுகிறேன்.

 இருதயப்பூர்வமாக மனந்திரும்புகிறவர்கள் ஒருவருக்கும் இரட்சிப்பு என்னும் கதவு அடைபட்டிருக்காது. கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது, அவரோடுகூட வலது பக்கம் ஒரு கள்ளனும் அறையப்பட்டான். அப்போது அவன் இயேசுவைப் பார்த்து, அடியேனை நினைத்தருளுமென்று இரக்கத்திற்காக மன்றாடினான். அந்த கடைசி நேரத்திலும் அவன் தேவனால் மன்னிக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டான்.

   தேவனைப் புறக்கணித்துத் தள்ளி, பிறகு மனந்திரும்ப வேண்டும் என எண்ணி மனந்திரும்பாமற்போனவர்களைப் பற்றி வேதம் கூறுகிற பயங்கரமான உதாரணங்களெல்லாம் உண்மைதான். ஆகவே, மனந்திரும்ப காலதாமதம்பண்ணுவதற்கு உனக்கு நேரம் கிடைக்கலாம். ஆனால், பாவத்தைக் குறித்த அறிவு, எண்ணம் வருகிறபோதே காலந்தாழ்த்தாமல் மனந்திரும்ப வேண்டும். காரணம், இவ்விதமான உணர்வைக் கொடுப்பதே பரிசுத்த ஆவியாகிய கடவுள் தான். ஆகவே, மனந்திரும்ப காலந்தாழ்த்தாதே, உடனடியாக செயல்படுத்து.

   நீங்கள் ஜெபம் செய்ய முடிகிறதா? உண்மையாகவே மனந்திரும்புகிற ஜெபத்தைச் செய்கிறீர்களா? மனமாற்றத்தை தேவனிடம் கேட்கிறீர்களா? இவைகள் உங்கள் இருதயத்தில் கிரியை செய்யும்போது, நீங்கள் ஏறெடுக்கிற ஜெபத்திற்கு தேவன் பதிலளிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

   நீண்ட காலமாக கிறிஸ்துவை வேண்டாமென்று புறக்கணித்தவர்களுக்கு பழைய ஏற்பாட்டில் தைரிய மூட்டுகிற வார்த்தை உள்ளது. “நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால் உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னை கைவிடவும்மாட்டார், உன்னை அழிக்கவும்மாட்டார்” (உபாகமம் 4:30-31).

   இப்படி நினைப்பது செங்குத்தான இடத்தில் நடந்து சென்று ஆபத்தை நோக்கிச் செல்லுவதற்கு சமம். வேதம் கூறும் எச்சரிப்புக்கு நம்மை நடத்தும் “தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே (ரோமர் 2:4-5).

   தேவனுக்கு செவி கொடுக்காமல் இப்படியே காலந்தாழ்த்தி சென்றால், அவர் ஒரு போதும் உன்னில் கிரியை செய்யாத காலம் வரத்தான் செய்யும். நீங்கள் மனந்திரும்பும்போது உண்மையாக மனந்திரும்ப வேண்டும். ஒரு வேலை உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம் செய்ய வேண்டியதை செய்யாமல்விட்டால், கிருபையின் சிலாக்கியத்தை கடந்து போனவர்களாகிவிடுவீர்கள்.

10. என்னுடைய ஜெபங்களுக்கு தேவனால் பதிலளிக்கக்கூடும் என்று நான் எண்ணாததால், நான் மனமாற்றமடையாமல் இருக்கிறேன்.

   சில பேருக்கு மனமாற்றமடைய வேண்டும் என்ற எண்ணம் உண்மையாக இருந்தாலும் தேவன் அவர்களுக்கு செவி கொடுப்பார் என்ற முழு விசுவாசமில்லாமல் இருக்காலம். மற்றவர்களை தேவன் இரட்சிக்கிறார் என்ற நிச்சயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், அவர்களையும் அவர் இரட்சிக்கிறார் எனறு உணர முடியாமல் இருக்கிறார்கள். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளினதில்லை என்று வாக்கு பண்ணியிருக்கிறார். மேலும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்கிற எவனும் இரட்சிக்கப்படுவான் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 10:13). நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

   மூன்று உண்மைகளை நினைவில் வைக்க வேண்டும். இவைகளை தேவன் நிச்சயம் காப்பார். முதலாவது அவரது  உண்மைத் தன்மை, இரண்டாவதாக இரட்சிக்கக்கூடிய அவரது சித்தம், மூன்றாவது தவறிழைக்காத அவரது வல்லமையாகும். அவருடைய பூரணமான உண்மைத் தன்மையைக் குறித்து, நீ கேள்வி எழுப்புகிறாயா? அவர் முழுவதும் பரிசுத்தமாக இருப்பதால், தன்னை ஒருபோதும் கறைபடுத்த மாட்டார். அவர் தாம் வாக்கு பண்ணினவைகளை நிறைவேற்றமாட்டாரென்பது கற்பனையிலும் எண்ண முடியாததாக உள்ளது.

   அவர் தமது விருப்பத்தின்படி இரட்சிக்கிறதைக் குறித்து நீங்கள் சந்தேகிக்கிறீர்களா? 2பேதுரு 3:9 ஐ நினைவு கூறுங்கள். “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்”.

   தேவனுக்கு இரட்சிக்கக் கூடிய போதுமான வல்லமை இல்லையென்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவருடைய வல்லமையில்லாமல் ஒருவரும் இரட்சிப்பையோ அல்லது மனமாற்றத்தையோ அடைய முடியாது. தேவனுடைய வாக்குத்தத்தம் பற்றிய சந்தேகத்தை உங்கள் மனதிலிருந்து எடுத்துப் போடுங்கள். வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்கிற எவனும் இரட்சிக்கப்படுவானென்று, உண்மையான மனந்திரும்புதலோடு வருகிறவர்களுக்கு இரட்சிப்பு உண்டு என தேவன் வாக்குப் பண்ணியிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.  நம்பிக்கையின் முக்கிய அம்சமே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கபட்டீர்கள் என்பது தான் (எபேசியர் 2:8).

   அவரை நம்புகிற ஒருவன் மேலும் குற்றஞ்சுமராது (சங்கீதம் 34:22). மனந்திரும்புதலோடு தேவனிடம் செல். நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீ புறக்கணியீர் (சங்கீதம் 51:17). மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார் என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக என்று தாவீதைப்போல் உன்னால் சீக்கிரமே கூற முடியும் (சங்கீதம் 66:19-20). 

தேடுகிறவர்களின் பிரச்சனை (Download PDF)