மார்ச் 4       

“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்”

கொலோ 3:2

      வேதம் தெளிவாகச் சொல்லி இருக்கிற ஒரு உண்மை பூமியில் உள்ளவைகளைத் தேடாதே. ஆனால் மேலானவைகளைத் தேடு என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு நாம் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம்? பூமியில் உள்ளவைகளையா? அல்லது மேலானவைகளையா? இன்றைக்கு எல்லோரும் பூமியிலுள்ளவைகளைத் தேடுகிறார்கள். மேலானவைகளை தேடுவதில்லை. இயேசு கிறிஸ்து ‘உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்’ என்று சொல்லுகிறார். உங்கள் பொக்கிஷம் ஒன்று பரலோகத்தில் இருக்கும் அல்லது பூலோகத்தில் இருக்கும்.

      “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை” (1 யோவான் 2:5) என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. நாம் உலகத்தையும், பரலோகத்தையும் நேசிக்க முடியாது. அது பொய். நாம் எதில் அன்புகூருகிறோம்? “ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்” (நீதிமொழிகள் 23:4-5).

      இந்த உலகத்தில் நிலையற்றவைகள் மீது ஏன் நாம் கவனம் வைக்கவேண்டும்? அவைகளெல்லாம் கழுகுகளைப் போல சிறகுகளை அடித்துக்கொண்டு உயரமாக ஆகாயமார்க்கமாகப் பறந்து சென்றுவிடும். அப்பொழுது நீ சம்பாதித்தவைகள் யாருடையதாகும். நாம் தேவனுடைய காரியங்களுக்கு எவ்விதமான மதிப்பை கொண்டிருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திப்பது மிக அவசியமானது.